ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; விறுவிறுப்பாக நடக்கும் வாக்குப்பதிவு - வெல்லப்போவது யார்?

By KU BUREAU

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மா.கி.சீதாலட்சுமி வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர்கள் உட்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இத்தேர்தலில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக, 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில், ஈரோடு கிழக்கு தொகுதியின் பல்வேறு வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடந்து வருகிறது.

மாற்றுத் திறனாளிகள், முதியோர் வாக்களிக்க சக்கர நாற்காலி, சாய் தள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் துணை ராணுவத்தினர் மற்றும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கிய 2 மணி நேரத்திற்கு பின், 9 மணி அளவில் 10.95 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று மாலை 6 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைகிறது.

வாக்குப் பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான, சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 8ம் தேதி காலை நடக்கிறது. அன்று தேர்தல் முடிவுகள் முழுமையாக தெரியவரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE