ராமேஸ்வரம்: மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்!  

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

ராமேசுவரம் அருகே மரைக்காயர்பட்டினத்தில் மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் (CMFRI) இந்திய அரசின் வேளாண்மை அமைச்சகத்தின் வாயிலாக 1947ஆம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி நிறுவப்பட்டது. இது 1967ஆம் ஆண்டு இந்திய வேளாண் ஆய்வுக் கழகத்தின் அங்கமானது. இவ்வாய்வு நிறுவனம் கடல் மீன் வளம் அதன் உற்பத்தி பெருக்கம், பாதுகாப்பு ஆகியவற்றைச் சார்ந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் மரைக்காயர்பட்டிணத்தில் மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்டு 76-வது ஆண்டு விழா திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகள் குறித்து பள்ளி மாணவ-மாணவிகள் அறிந்துகொள்ளும் வகையில் ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது.

மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள அருங்காட்சியத்தை பார்வையிடும் மாணவர்கள்.

திங்கட்கிழமை காலை முதல் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவ-மாணவிகள் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்துக்கு வந்தனர். அங்கு சிப்பிகளை உருவாக்குதல், சிப்பிகளை பண்ணையில் வளர்த்தல், கடல் முத்துக்கள் உருவாக்குதல், கடல் சங்கு, கடல் அட்டை வகைகளை குஞ்சு பொரிக்க வைத்தல், கடல்பாசி வளர்ப்பு, ஆழ்கடல் ஆராய்ச்சி, மீன் அருங்காட்சியகம் போன்றவற்றை மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

பிற்பகலில் மாணவா்களுக்கு கடல் பல்லுயிா் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், கடல்சார் விஞ்ஞானிகள்-மாணவர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. 11-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஊக்குவிப்பு-தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மரைக்காயர் பட்டினம் கேந்திர வித்யாலய பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜான், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் ரவிச்சந்திரன், மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய முதுநிலை விஞ்ஞானி வினோத் ஆகியோர் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE