சென்னை: தமிழகத்தின் நெல் கொள்முதல் உரிமையை மத்திய அரசுக்கு வழங்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் காவிரி பாசன மாவட்டங்கள் தவிர மீதமுள்ள மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யும் அதிகாரத்தை தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்துக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இது தமிழக விவசாயிகளுக்கு திமுக அரசு இழைக்கும் பெரும் துரோகம் ஆகும்.
மத்திய அரசு அறிவுறுத்தியதால் தாரைவார்த்து விட்டதாக தமிழக அரசு கூறுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. மத்திய அரசின் தேசிய நுகர்வோர் இணையத்தால் போதிய அளவு நெல் கொள்முதல் செய்ய முடியாவிட்டால் மீதமுள்ள நெல்லை விவசாயிகள் தனியாருக்கு மிகக்குறைந்த விலைக்கே விற்பனை செய்ய வேண்டி வரும். மத்திய அரசு கட்டாயப்படுத்தி இருந்தால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்திருக்க வேண்டும். அதை விடுத்து மாநில அரசின் உரிமைகளையும், விவசாயிகளின் நலன்களையும் மத்திய அரசிடம் தாரை வார்த்திருக்கக் கூடாது.
மாநில அரசுகளின் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படும்போது விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைப்பதால், அதை சிதைக்கும் வகையில் மத்திய அரசு செயல்படக் கூடாது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பிலேயே நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், தமிழக அரசே சொந்த நிதியில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். இதற்காக வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியத்தை தமிழக அரசு தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.