மத்திய அரசு பட்ஜெட் 2025: வரவேற்பும் அதிருப்தியும் - இது டெல்டா பார்வை

By KU BUREAU

தஞ்சாவூர்: மத்திய அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினர் வரவேற்பும், அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்புக் குழு செயலாளர் எஸ்.புஷ்பவனம்: முன்பு பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் கூட வருமான வரி செலுத்தி வந்தனர். தற்போது ரூ.12 லட்சம் வரை வருமான உள்ளவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்பு நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இதனால், பொருளாதார உற்பத்தி அதிகரித்து, வறுமை குறையும்.

புது திட்டத்தில் உள்ளவர்களில் ரூ.12 லட்சம் வருமான உள்ளவர்களுக்கு ரூ.80 ஆயிரம், ரூ.18 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.70 ஆயிரம், ரூ.25 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.1.10 லட்சம் மிச்சமாகும். ஆயுள் காப்பீடு பிரீமியத்துக்கு சலுகை வழங்கியிருக்கலாம். 36 உயிர் காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரி நீக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

ஐஐடியில் இடங்கள் அதிகரித்திருப்பதும், கூடுதலாக 10 ஆயிரம் மருத்துவ இடங்கள் ஏற்படுத்தியிருப்பதும் வரவேற்கத்தக்கது. தொழில் முனைவோர்களுக்கும், சிறிய, நடுத்தர தொழிலதிபர்களுக்கும் ஊக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறையில் வசூலிக்கப்படாத வருவாய்களிலும், வரி வசூல் ஓட்டைகளை அடைப்பதிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

பொருளாதாரத் துறை முன்னாள் பேராசிரியர் ஆர்.பழனிவேலு: செயற்கை நுண்ணறிவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, ஏ,ஐ தொழில்நுட்பத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற விரிவாக்கத் திட்டத்துக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் உதிரிபாகங்களின் இறக்குமதிக்கு வரி விலக்கால் எலெக்ட்ரிக் வாகனங்கள் விலை குறையும். 50 சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்பட உள்ளது பட்ஜெட்டில் வரவேற்கதக்கது.

விவசாயிகள் எதிர்ப்பார்த்த குறைந்த பட்ச ஆதார விலை, கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. வளர்த்த இந்தியா லட்சியத்தை அடைய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான மேம்பட்ட வாய்ப்புகளை இந்த பட்ஜெட் வழங்கவில்லை.

இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.எஸ்.தனபதி: ரூ. 40 லட்சம் கோடிக்கு மேல் தயாரிக்கப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் விவசாயத்துக்கு ரூ. 1.71 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை நதிகள் இணைப்புக்கு நிதி ஒதுக்கப்படவே இல்லை. மாத ஊதியம் வாங்குபவர்களுக்கு மட்டும்தான் வரிவிலக்குகள் சாதகமானவை. ஆனால், நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்கள் கோடிக்கணக்கானோருக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் எதுவுமே இல்லை. விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் பட்ஜெட் உள்ளது.

காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம்: கிசான் அட்டை மூலம் கூடுதல் கடன் வசதி, சிறுகுறு நிறுவனங்களுக்கு கடன் வட்டியில் சலுகை, விவசாயத்தில் ஏஐ தொழில்நுட்பம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் பிஹாருக்கு 5 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்துக்கு புதிய ரயில் திட்டங்கள், மெட்ரோ, வெள்ள நிவாரண நிதி, சூரிய மின்சக்தி, மீனவர் நலம் என எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுந்தர.விமலநாதன்: மத்திய பட்ஜெட்டில் பருத்தி, பருப்புக்கு என சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு என்பதை, 3 ஆண்டுகள் என மாற்றி, தீவிரமாக செயல்படுத்த வேண்டும். உரத்தட்டுப்பாட்டை போக்க தமிழகத்தில் உரத்தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும்.

பிரதமரின் விவசாயிகள் உயிர்காப்பீடு திட்டம் என்கின்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்து வேண்டும். நதிகள் இணைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என 10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தும், இதுவரை எந்த நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை. ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் வேளாண் விளைபொருட்களைப் பாதுகாக்க குளிர் பதன கிடங்குகள் அமைக்க வேண்டும். பயிர்க் காப்பீடு திட்டத்தை மத்திய அரசே ஏற்று செயல்படுத்த வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE