கடன் பெறுவது தொடர்பாக ஆங்கிலத்தில் திருப்பூர் மாநகராட்சி தீர்மானம்: கவுன்சிலர்கள் எதிர்ப்பு

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: கடன் பெறுவது தொடர்பாக ஆங்கிலத்தில் மாநகராட்சி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து புகார் அளித்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நேற்று நடந்ததில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் 658-வது தீர்மானத்தில், திருப்பூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் அம்ருத் 2017-20 புதிய குடிநீர் திட்டத்துக்கு வரப்பட்ட திருத்திய நிர்வாக அனுமதி பெறப்பட்ட அரசாணையின்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ரூ.40 கோடியினை தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் (டுபிட்கோ) மூலம் பெற்று திட்டப்பணியை கீழ்கண்ட விவரப்படி தீர்மானம் இயறுத்தல் என, 6 தலைப்புகளில் முழுக்க ஆங்கிலத்தில் தீர்மானத்தை குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக மாநகராட்சி கவுன்சிலர்கள் மத்தியிலும் அதிருப்தி எழுந்துள்ளது. 53-வது வார்டு கவுன்சிலர் ர.மணிமேகலை ரவிச்சந்திரன், மாநகராட்சி ஆணையர் எஸ். ராமமூர்த்தியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அம்ருத் திட்டத்தில் குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்கு, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி கழகம் (டுபிட்கோ) நிறுவனத்தில் இருந்து ரூ. 40 கோடி கடன் பெற தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த தீர்மான முன்மொழிவில் சொல்லப்பட்டுள்ள நிபந்தனைகள், ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கடுமையான நிபந்தனைகளை, மக்கள் பிரதிநிதிகளான கவுன்சிலர்கள் தெளிவாக தெரிந்து கொள்ளக்கூடாது என இருட்டடிப்பு செய்யும் நோக்கத்தில் உள்ளது. தீர்மானம் முன்மொழிவை தாய்மொழி தமிழில் முழுமையாக கொடுக்காதது கண்டிக்கத்தக்கது. குப்பை, குடிநீர் வரி திருப்பூர் மக்களுக்கு பெரும் சுமையாக மாறி உள்ளது. இந்நிலையில் கூடுதல் கடன் பெறுவதும், அதற்கான நிபந்தனைகளும் சாமானிய மக்களை மேலும் நெருக்கடிக்கு தள்ளும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையர் எஸ்.ராமமூர்த்தி கூறும்போது, “அது தமிழில் மொழி மாற்றம் செய்யப்படவில்லை. அங்கிருந்து வந்த தகவலை அப்படியே ஆங்கிலத்தில் தீர்மானத்தில் கொடுத்துவிட்டோம். கவுன்சிலர்கள் தமிழில் கேட்டுக்கொண்டபடி, அதனை மொழிபெயர்ப்பு செய்து, வழங்க உள்ளோம்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE