சென்னை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் அமர்வு நீதிமன்றம் தமிழ்நாடு முழுவதும் உள்ள கொடிக்கம்பங்கள் அனைத்தையும் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்ற உத்தரவு அடிப்படை உரிமையை பறிப்பதாகும். இதுகுறித்து மாநில அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் அமர்வு நீதிமன்றம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்களின் கொடிக்கம்பங்கள் அனைத்தையும் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என கடந்த 27.01.2025 ஆம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, நீதிமன்றத்தின் தீர்ப்பை காட்டி, தமிழ்நாட்டில் சாலைகளில் ஊர்வலம் செல்வதையும், முக்கிய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம், உண்ணாநிலைப் போராட்டம் நடத்துவது போன்ற ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.
அதிகார வர்க்கத்தின் தவறுகள் சுட்டிக் காட்டுவதையும், அரசுக் கொள்கைகள் மீதான விமர்சனங்கள் முன் வைப்பதையும் பெருமளவு வெட்டிக் குறைத்து, கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. காவல் துறையின் அனுமதி பெற்று நடத்தப்படும் இயக்கங்கள் கூட, கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டு, இயக்கத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கு அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
இப்போது, கட்சி அரசியல் உணர்வை வெளிப்படுத்தும் வகையில், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் பொது இடங்களில் போடப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் நீண்ட பல பத்தாண்டுகளாக இருந்து வருகின்றன. நகர வளர்ச்சி மற்றும் சாலை விரிவாக்கம் என்று வரும் போது கொடிக்கம்பங்கள், தலைவர்கள் சிலைகள் என அனைத்தும் புதிய இடங்களில் மாற்றி அமைத்துக் கொள்ளும் சுமுக நடைமுறை தொடர்கிறது.
» அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளம் என விளம்பரம் செய்து ஏமாற்றாதீர்கள்: தினகரன் சீற்றம்
இவைகள் எதனையும் கருத்தில் கொள்ளாது, மனுதாரரின் ஜனநாயக உரிமையை மறுத்து, பிற பகுதிகளில் நீடித்து வரும் அமைதி சூழலுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வின் தீர்ப்பு அமைந்திருக்கிறது. மேலும், பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் இருக்கக் கூடாது என்பதும், அப்படி இருந்தால் அதற்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதும், அபராதம் விதிக்க வேண்டும் என்பதும் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகும்.
இத்தகைய எதிர்மறை கண்ணோட்டம் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அமர்வின் உத்தரவு மறுபரிசீலனை செய்து, திருத்தப்பட வேண்டிய தீர்ப்பாகும். அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பொது நல அமைப்புகளின் ஜனநாயக செயல்பாடுகளை உறுதி செய்ய, மதுரைக் கிளை நீதிமன்ற உத்தரவின் மீது மேல்முறையீடு செய்து, சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொண்டு, ஜனநாயக நெறிமுறைகளை பாதுகாக்க வேண்டும் அல்லது தமிழ்நாடு சட்டமன்றத்தில் இது தொடர்பாக சிறப்பு சட்டம் நிறைவேற்றி, அரசியலமைப்பு சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் நிலைநாட்ட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்