சென்னை: சென்னையில் காலை உணவு திட்டத்தை மாநகராட்சியே தொடர்ந்து செயல்படுத்தும் என்று மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு சமைத்து வழங்கும் பணியை தனியாரிடம் வழங்க மாநகராட்சி முடிவு செய்து, அதற்கான டெண்டர் கோரியது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. நேற்று முன்தினம் நடைபெற்ற மாநகராட்சி மன்ற கூட்டத்திலும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி கவுன்சிலர்களும், டெண்டரை ரத்து செய்ய வலியுறுத்தினர். இந்நிலையில் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு சமைத்து வழங்கும் பணியை மாநகராட்சியே தொடர முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மேயர் ஆர்.பிரியா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளின் உடல் நலன் காக்கவும், சோர்வின்றி கல்வி கற்கவும் ஏதுவாக முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 356 பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 49,147 குழந்தைகளுக்கு 35 சமையல் கூடங்கள் மூலம் காலை உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது.
» மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ பிப். 01, 2025
» யு-19 உலகக் கோப்பையில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி
இந்நிலையில், மாநகராட்சியில் வெளி நிறுவனம் வாயிலாக காலை உணவு சமைத்து பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் கோரும் பணி ரத்து செய்யப்பட்டு, காலை உணவு சமைத்து வழங்கும் பணியை மாநகராட்சியே தொடர்ந்து மேற்கொள்ளும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.