ராமேசுவரம்: இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமேசுவரம் மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து ஜனவரி 25ல் கடலுக்குச் சென்ற ரூபில்டன், டேனியல், சச்சின் ஆகியோருக்குச் சொந்தமான மூன்று விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி, படகுகளில் இருந்த 34 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப் பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இலங்கை சிறைகளில் அடைக்கப்ப்பட்டிருக்கும் மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே மீனவர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மீனவப் பிரதிநிதி சேசுராஜா தலைமை வகித்தார். மீனவப் பிரதிநிதிகள் சகாயம், எம்ரிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், ஆர்ப்பாட்டத்தில் இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்திய - இலங்கை இரு நாட்டு மீனவப் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும். இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அதிக குதிரை கொண்ட விசைப் படகுகள் பாக் ஜலசந்தி மற்றும் கச்சத்தீவு கடற்பகுதியில் மீன்பிடிக்காகமல் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
» நெல் கொள்முதலை தனியார் மயமாக்கும் உத்தரவு - ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்!
ராமேசுவரத்தில் இழுவை படகுகளை ஒப்படைத்து விட்டு மாற்றுத் தொழில் செய்ய விரும்பும் படகு உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.