வீட்டு வசதி வாரியம் ஒதுக்கிய சொத்துகளுக்கு பட்டா பெற சிறப்பு முகாம்

By KU BUREAU

வீட்டு வசதி வாரியத்தில் ஒதுக்கப்படும் சொத்துகளுக்கு பட்டா வழங்க, வருவாய் துறையுடன் இணைந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. சென்னை மாவட்டத்தில் உள்ள ஒதுக்கீடுதாரர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பட்டா பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 1961-ம் ஆண்டு முதல் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி மக்களுக்கு ஒதுக்கீடு செய்து வருகிறது. அவ்வாறு ஒதுக்கீடு பெற்றவர்கள் முழு தொகையும் செலுத்திய பிறகு, நடைமுறையில் உள்ள வாரிய விதிமுறைகளின்படி விற்பனை பத்திரம் வழங்கப்படுகிறது. விற்பனை பத்திரம் பெற்ற ஒதுக்கீடுதாரர்களுக்கு தமிழக அரசு உத்தரவுப்படி முதல்கட்டமாக சென்னை மாவட்டத்தில் வருவாய் துறையிடம் இருந்து நில உரிமை ஆவணம் (பட்டா) பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில், வாரிய திட்டங்களில் ஒதுக்கீடு பெற்றவர்கள் பட்டா பெற வருவாய் துறையுடன் இணைந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

எனவே, ஒதுக்கீடுதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, விற்பனை பத்திரங்கள் மற்றும் இதர ஆவணங்களை சிறப்பு முகாம்களில் ஒப்படைத்து, வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து தாங்கள் வாங்கிய சொத்துக்கு பட்டா பெற்றுக் கொள்ளலாம்.

இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், துண்டு பிரசுரம் விநியோகம் செய்வது, வீடு வீடாக சென்று அங்கு வசிப்பவர்களிடம் உரிய ஆவணங்கள் சேகரிப்பது, அனைத்து ஒதுக்கீடுதாரர்களுக்கும் கடிதம் அனுப்புவது ஆகிய பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE