மத்தூர் சுங்கச்சாவடி அருகே வாகனங்களை நிறுத்தி பணம் வசூல் - எஸ்எஸ்ஐ, தலைமை காவலர் சஸ்பெண்ட்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: மத்தூர் சுங்கச்சாவடி அருகே வாகனங்களை நிறுத்தி பணம் வசூல் செய்யப்பட்டதாக வீடியோ சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், தலைமை காவலர் ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து எஸ்பி தங்கதுரை உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் இருந்தும், ஒசூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், கிருஷ்ணகிரி, மத்தூர், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை வழியாக, அதிகளவு பயணிகள் மேல்மருவத்தூர், மேல்மலையனூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று (ஜன. 29) தை அமாவாசை என்பதால் கர்நாடக மாநிலத்தில் இருந்தும், ஒசூர், கிருஷ்ணகிரி சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்தும் மத்தூர் வழியாக சுற்றுலா வாகனங்கள் சென்றன. அப்போது, மத்தூர் சுங்கச்சாவடி அருகில் ஊத்தங்கரை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட நெடுஞ்சாலை ரோந்து வாகன பிரிவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அங்கு ரோந்து வாகனத்தில் பணியில் இருந்த போலீஸார் பணம் வசூல் செய்யப்பட்டதாக வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில இன்று (ஜன. 30) பரவியது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி எஸ்பி தங்கதுரை விசாரணை நடத்த உத்தரவிட்டார். தொடர்ந்து நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணியில் இருந்த சிறப்பு எஸ்எஸ்ஐ திருநாகரன், தலைமை காவலர் சரவணன் ஆகியோரை முதற்கட்டமாக கிருஷ்ணகிரி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில், இன்று மாலை எஸ்எஸ்ஐ திருநாகரன், தலைமை காவலர் சரவணன் ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து எஸ்பி உத்தரவிட்டார். இச்சம்பவம் காவல்துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE