கரூர் காவல் நிலையத்தில் ஆஜராக சென்ற 'கள்' இயக்கத்தின் நல்லசாமி பகிர்ந்த ஆதங்கம்!

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கள் போதைப் பொருள் என நிரூபித்த வாதத்தில் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை தராமல் ஏமாற்றிய புகாரில் தீர்ப்பின் நகல் வழங்கியப் பிறகே பதிலளிக்க முடியும் என கரூர் நகர காவல் நிலையத்தில் கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி எழுதிக் கொடுத்தார்.

கரூர் நகர காவல் நிலையத்தில் இன்று (ஜன. 30ம் தேதி) தமிழ்நாடு கள் இயக்க கள ஓருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி ஆஜரானார். அதன்பின் செய்தியாளர்களை அவர் கூறியது: ''கள் ஒரு தடை செய்யப்பட வேண்டிய போதைப் பொருள் என நிரூபித்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2011ம் ஆண்டு சென்னை எழும்பூர் இக்சா அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி அனந்தன் விவாதத்தில் பங்கேற்றார் மற்றும் அவரால் அழைத்து வரப்பட்ட ஓய்வுப்பெற்ற நீதிபதி ஆறுமுகம் நடுவராக பங்கேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் கள் ஒரு போதை பொருள் என தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் எஸ்.பாஸ்கரன் கரூர் நகர காவல் நிலையத்தில் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையை வழங்காமல் ஏமாற்றி விட்டதாக அண்மையில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக கரூர் நகர காவல் நிலையத்தில் இருந்து நேரிலும், பதிவு அஞ்சலிலும் அழைப்பாணைகள் (சம்மன்) வழங்கப்பட்டன.

இன்று ஆஜராவதாக தெரிவித்த நிலையில், இன்ஸ்பெக்டர் இல்லாததால் வேறு ஒரு நாள் ஆஜராகுமாறு தெரிவித்துள்ளனர். விவாதம் நடந்தது சென்னையில், நான் வசிப்பது ஈரோடு மாவட்டம் அரச்சலூரில், குமரிஅனந்தன் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ளார். அதிகார எல்லைக்குள் விசாரணை நடத்தாமல் கரூர் நகர காவல் நிலையத்தில் இருந்து அழைப்பாணை அனுப்பியது ஏன்?

மேலும் விவாதத்தின் தீர்ப்பின் நகல் வழங்கப்படாத நிலையில் எவ்வித முகாந்திரமுமின்றி சட்டத்திற்கு எதிராக அழைப்பாணை அனுப்பியுள்ளனர். தீர்ப்பு நகலை பெற்றுக் கொடுத்த பிறகே பதிலளிக்க முடியும். எனவே தீர்ப்பு நகலை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என எழுதி கொடுத்துள்ளேன்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE