மாற்று சமூக பெண்ணை மணந்த தம்பியை மனைவியுடன் ஆணவக்கொலை - அண்ணனுக்கு தூக்கு தண்டனை!

By KU BUREAU

கோவை: மேட்டுப்பாளையத்தில், மாற்று சமூகப் பெண்ணை காதல் திருமணம் செய்த தம்பி மற்றும் அவரது மனைவியை வெட்டிக் கொன்ற வழக்கில், அண்ணணுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்திலுள்ள, சீரங்கராயன் ஓடையைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் கூலித் தொழிலாளியாக இருந்தார். அதே பகுதியில் வசித்து வந்த வர்ஷினிபிரியா. இவர் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் காதலித்துள்ளனர். இவர்களது காதலுக்கு கனகராஜின் அண்ணன் வினோத்குமார் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இருப்பினும், கனகராஜ், வர்ஷினி பிரியாவை கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் அதே ஊரில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்த சூழலில் 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி வினோத் குமார் அரிவாளுடன், தனது தம்பி கனகராஜ் வீட்டுக்குச் சென்று, அங்கிருந்த அவரையும், உடனிருந்த வர்ஷினி பிரியாவையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றார். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வினோத் குமார் உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வர்ஷினி பிரியா இரு நாட்கள் கழித்து உயிரிழந்தார்.

இது தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீஸார் வினோத்குமார், அவருக்கு உடந்தையாக இருந்ததாக சின்னராஜ், கந்தவேல், ஐயப்பன் ஆகிய நால்வர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை கோவை பட்டியலின மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற அமர்வில் நடைபெற்று வந்தது. நீதிபதி விவேகானந்தன் வழக்கை விசாரித்தார்.

கடந்த 23ம் தேதி இந்த வழக்கில் வினோத் குமார் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. சின்னராஜ், கந்தவேல், ஐயப்பன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நேற்று மாலை தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அதில், இருவரையும் படுகொலை செய்த வினோத்குமாருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். தொடர்ந்து வினோத்குமார் போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE