சென்னை ஈசிஆர் சாலையில் திமுக கொடியுடன் பெண்களை துரத்திய கார் - நடந்தது என்ன?

By பெ.ஜேம்ஸ் குமார்

முட்டுக்காடு: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் சென்ற காரை திமுக கொடி கட்டிய சொகுசு காரில் துரத்தி சென்று இளைஞர்கள் வழிமறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள் என ஆறு பேர் சென்ற காரை நான்கு இளைஞர்கள் காரில் துரத்தி சென்ற வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த ஜன.24ம் தேதி அன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் கிழக்கு கடற்கரை சாலையில், முட்டுக்காடு படகு குழாம் மேம்பாலத்தின் மீது காரை நிறுத்திய இளைஞர்கள், பக்கிங் ஹாம் கால்வாய் கோவளம் கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, இளைஞர்களின் காருக்குப் பின்னால், மற்றொரு கார் வந்து நின்றுள்ளது. அந்த காரில் 4 பெண்கள் மற்றும் இரு ஆண்கள் இருந்துள்ளனர். பின்னர் அவர்கள் சற்று நேரத்தில் அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.

அப்போது, அந்த பெண்களின் கார், ஏற்கெனவே அங்கு நின்றிருந்த இளைஞர்களின் காரை உரசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த இளைஞர்கள், பெண்கள் சென்ற காரை துரத்திச் சென்றுள்ளனர். இதனால், பதற்றமடைந்த பெண்கள், இச்சம்பவத்தை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். மேலும், இது குறித்து போலீஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

முட்டுக்காடு மேம்பாலத்தில் இருந்து கானத்தூரில் அந்த பெண்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு வரை நிகழ்ந்த இச்சம்பவத்தை, சம்பந்தப்பட்ட பெண்கள், சமூக ஊடகங்களிலும் பகிர்ந்தனர். மேலும், இதுகுறித்து அந்த பெண்கள் கானத்தூர் போலீஸாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காரை உரசிவிட்டு நிற்காமல் சென்றதால், நியாயம் கேட்க சென்றபோது, பெண்கள் இருந்த கார் நிற்காமல் சென்றுள்ளது. இதனால், இளைஞர்கள் அந்த காரை துரத்தியது தெரியவந்துள்ளது.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகிவிட்டதால், காரில் வந்த இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கானத்தூரைச் சேர்ந்த சின்னி திலக் என்ற பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேளம்பாக்கம் உதவி ஆணையர் வெங்கடேசன், கானத்தூர் ஆய்வாளர் முருகன் தலைமையில் நான்கு தனிப்படை அனைத்து காரில் துரத்தியதாக கூறப்படும் இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதனிடையே, இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தபோது, சம்பந்தப்பட்டவர்கள் திமுக-வினர் என்பதால் போலீஸார் இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது. அதற்குள் சமூக ஊடகங்களில் சம்பவம் வைரலானதால், புகாரின் பேரில் போலீஸார் சிஎஸ்ஆர் பதிவு செய்துள்ளனர். அதே நேரம், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், இதில் பாதிக்கப் பட்டவர்களும் திமுக-வைச் சேர்ந்தவர்கள் என்பதால், இரு தரப்பும் போலீஸார் முன்னிலையில் ரகசியமாக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE