புதுச்சேரி: டிசம்பர் மாத ஊதியம் தராததால் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கால்நடைகளுடன் வந்து காத்திருந்து கிராம மக்கள், விவசாயிகள் தவித்தனர்.
புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் ராஜீவ் காந்தி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரி ஊழியர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை, இந்த நிலையில், புதுச்சேரி அரசு தன்னாட்சி கல்லூரிகள் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஊதியம் கோரி துணை நிலை ஆளுநர், தலைமைச் செயலர் ஆகியோருக்கு கோரிக்கை கடிதம் தந்தும் தரப்படவில்லை.
ஊதியம் வழங்க நடவடிக்கை இல்லை என ஊழியர்கள் தெரிவித்து அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று கால்நடை மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலையில் கிராமங்களில் இருந்து மாடுகளுடன் சிகிச்சைக்காக கிராம மக்கள் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு வந்தனர். அதேபோல் ஆடுகள், நாய்கள் என தங்கள் கால்நடைகளுடன் பலரும் சிகிச்சைக்காக வாகனங்களை ஏற்பாடு செய்து கிராமங்களில் இருந்து அதிகமானோர் வந்தனர். ஆனால் யாரும் சிகிச்சை அளிக்க வரவில்லை.
» திமுக-க்காரர் என்பது குற்றம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ அடையாளமா? - வானதி சீனிவாசன் அதிர்ச்சி
» சென்னை ஈசிஆரில் பெண்களை துரத்திய திமுக கொடி பொருத்திய கார்: இபிஎஸ் கடும் கண்டனம்
கிராம மக்கள் கூறுகையில், கிராமப் பகுதியில் இருந்து உடல்நிலை சரியில்லாத ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட பிராணிகளை பலரும் தங்கள் வாகனங்களிலோ, லாடகை வாகனங்களிலோ அழைத்து வந்தோம். இன்று சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர். நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் என்று கிராம மக்கள் கூறினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் கேட்டதற்கு, ஊதியத்தை சரியாக அரசு வழங்குவதில்லை. கடந்த டிசம்பர் மாத ஊதியத்தை இன்னும் தரவில்லை, மனு தந்து நடவடிக்கை இல்லாததால் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். ஏற்கெனவே பென்சன்தாரர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதனால் ஊதியப் பணத்தை மடைமாற்றி அவர்களுக்கு தர முடிவு எடுத்துள்ளதால் எங்களுக்கு தரவில்லை. அரசு முடிவு எடுக்கும் வரை போராட்டம் தொடரும்” என்று ஊழியர்கள் கூறினர்.