டாப் 10 செய்திகள்: அதிகரித்த பாஜக ‘வருவாய்’ முதல் ஸ்டாலின் Vs அன்புமணி வரை

By KU BUREAU

மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு - இந்தியா கண்டிப்பு: காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அப்போது, கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் காயடைந்தனர்.

இந்தச் சம்பவத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சகம், டெல்லியில் உள்ள இலங்கையின் தூதரை அழைத்து எதிர்ப்பை பதிவு செய்தது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மூலமும் இந்தப் பிரச்சினையை இலங்கை அதிகாரிகளிடம் எழுப்பியது.

மேலும், “எந்தச் சூழ்நிலையிலும் இத்தகைய தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. மீனவர்களின் பிரச்சினைகளை அவர்களின் வாழ்வாதாரக் கவலைகளைக் கருத்தில் கொண்டு மனிதாபிமானத்துடன் கையாள வேண்டும். மேலும், மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பாக தற்போதுள்ள இருதரப்பு ஒப்பந்தங்களை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று இலங்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

பாஜக வருமானம் அதிகரிப்பு: தேர்தல் ஆணையத்திடம் முக்கிய அரசியல் கட்சிகள் தங்களின் ஆண்டு வருமானத்தை அறிக்கையாக சமர்ப்பித்துள்ளன. அதன்படி, பாஜகவுக்கு கடந்த 2022-23-ம் நிதியாண்டில் நன்கொடையாக 2,360 கோடி கிடைத்தது. இது 2023-24-ம் நிதியாண்டில் ரூ.4,340 கோடியாக அதிகரித்தது. இதில் ரூ.1,685 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் 2022-23-ம் நிதியாண்டு வருமானம் ரூ.452.4 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டில் 170 சதவீதம் அதிகரித்து ரூ.1,225 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் தேர்தல் பத்திரம் மூலம் ரூ.828.4 கோடி கிடைத்தது.

மோடியுடன் பேசியது என்ன? - ட்ரம்ப் தகவல்: “பிரதமர் மோடியுடன் நீண்ட நேரம் பேசினேன். அவர் அடுத்த மாதம், அநேகமாக பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருவார். இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக குடியேறி இருப்பவர்களை அழைத்துச் செல்ல மோடி ஒப்புக்கொண்டாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த ட்ரம்ப், “மோடி சரியானதைச் செய்வார். நாங்கள் அதுகுறித்து விவாதித்து வருகிறோம்” என்று கூறினார்.

திருப்பரங்குன்றம் விவகாரம் ஐகோர்ட் உத்தரவு: ‘திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்காவினர் உயிரினங்களை பலியிடுவதற்கும், அதனை சமைத்து உணவு பரிமாறுவதற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்’ என்று மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் சோலைக்கண்ணன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை, இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகர காவல் ஆணையர், இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர், திருமங்கலம் கோட்டச்சியார், சிக்கந்தர் பாதுஷா தர்கா அறங்காவலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இதே பிரச்சினை தொடர்பான மனுக்களுடன் சேர்த்து பட்டியலிட உத்தரவிட்டு தள்ளிவைத்தனர்.

தமிழகத்தில் 16 இடங்களில் என்ஐஏ சோதனை: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பவர்களைக் கண்டறியும் நோக்கில் தமிழகத்தில் 16 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் மீது வழக்கு: இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன், இந்திய அறிவியல் மையத்தின் முன்னாள் தலைவர் பலராம், உள்ளிட்ட 18 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் சதாசிவா நகர் காவல் நிலையத்தில் இந்தப் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. போவி பழங்குடியினத்தைச் சேர்ந்த துர்க்ப்பா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நயன்தாரா ஆவணப்படம்: நெட்ஃப்ளிக்ஸ் மனு தள்ளுபடி: நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடிதான்’படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க கோரி நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீனாவின் டீப்சீக் ஏஐ சாட்பூட் செயலிக்கு அமோக வரவேற்பு: சீனாவின் டீப்சீக் ஏஐ சாட்பூட் செயலிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால் அமெரிக்க பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டு, உலக கோடீஸ்வரர்களுக்கு ரூ.9.3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

“திராவிடத்தால் உருவானதுதான் நவீன தமிழ்நாடு”: “என்னை பொறுத்தவரை நம்பர் ஒன் முதல்வர் என்பதைவிட நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே இலக்கு. திராவிடம்தான் தமிழ்நாடு என்ற பெயரையும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று கொடுத்தது. இன்றைய நவீன தமிழ்நாடு, திராவிடத்தால் உருவானதுதான்” என்று விழுப்புரம் அருகே வழுதரெட்டியில் நடந்த 21 சமூக நீதிப் போராளிகளுக்கான மணிமண்டபம், ஏ.கோவிந்தசாமியின் நினைவரங்க திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

மேலும், “வன்னியர் பொது சொத்து வாரியம் அமைத்தது திமுக ஆட்சியில்தான். தற்போது சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

முதல்வர் ஸ்டானுக்கு அன்புமணி பதிலடி: முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி தரும் வகையில் சேலத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழக முதல்வர், விழுப்புரத்தில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளின் மணிமண்டபத்தை திறந்து வைத்துள்ளார். அந்த தியாகிகளின் குடும்பத்தை, வட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து சந்தித்துப் பேசி, கருணாநிதி, திமுக ஆகியோரைப் புகழ்ந்து பேச வைத்து, வீடியோ எடுத்துள்ளனர். வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின். நாங்கள் மணிமண்டபம் கேட்கவில்லை, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடுதான் கேட்கிறோம்” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE