விருதுநகர்: தேல்விகளில் இருந்து வெற்றிக்கான பாடத்தைக் கற்றிக்கொள்ளுங்கள். எந்த சிகரத்தையும் உங்களால் அடைய முடியும் என்று மாணவ, மாணவிகளுக்கு எவரெட்ஸ் சிகரம் ஏறிய முதல் தமிழ்நாட்டுப் பெண்மணி முத்தமிழ்ச்செல்வி கூறியுள்ளார்.
விருதுநகரில் 150-வது காபி-வித் கலெக்டர் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழ்நாட்டுப் பெண்மணியான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்தமிழ்ச் செல்வி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், "பள்ளி, கல்லூரி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு லட்சியத்தையும் உயர்வான குறிக்கோளையும் உருவாக்கவும் காபி-வித் கலெக்டர் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்தச் செய்து அதன் மூலம் அவரது சிந்தனையையும் ஆற்றையும் தூண்ட வேண்டும். அதற்காக பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோர் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படுகிறார்கள் என்று ஆட்சியர் கூறினார்.
எவரெஸ்ட் சிகரம் ஏறிய முத்தமிழ்ச் செல்வி பேசுகையில், ”வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகளையும் சவால்களையும் சந்திதுள்ளேன். பிரச்சினைகள் வரும்போதெல்லாம் மனம் உடையாமல் சாதிக்க வேண்டும் என்ற தூண்டுதல் இருந்தது. 10ம் வகுப்பு படித்தபோது ஓட்டப் போட்டியில் தோல்வியுற்றேன். அப்போது அதற்காக அழுதுகொண்டிருந்தபோது, அருகில் வந்த எனது உடற்கல்வி ஆசிரியை இமயமலை ஏறி தோற்கவில்லை, அழாதே என்று ஆறுதல் கூறினார்.
தேல்விகளிலிருந்து வெற்றிக்கான பாடத்தைக் கற்றிக்கொள்ளுங்கள். எந்த சிகரத்தையும் உங்களால் அடைய முடியும். திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான பிறகு பட்டம் படித்து, பின்னர் ஜப்பானிய மொழியைப் படித்து மொழி பெயர்ப் பாளராகப் பணியாற்றினேன். அதன்பின்னர், எவரெஸ்ட் சிகரம் தொட வேண்டும் என வேட்கை ஏற்பட்டது. கடுமையான பயிற்சி, முயற்சி மட்டுமின்றி தன்னம்பிக்கையும், மன வலிமையும் சாதனை படைக்க வைத்தது.
எவரெஸ்ட் சிகரம் ஏறுவது என்பது வாழ்வா, சாவா என்ற நிலைதான். ஆனால், கடும் மன உறுதியோடு எவரெஸ்ட் சிகரம் தொட்டேன். தற்போது, உலகில் உள்ள 7 கண்டங்களிலும் உள்ள மிக உயரமான மலைகளில் 6 மலைகளில் ஏறியுள்ளேன். விரைவில் மீதம் உள்ள ஒரு மலையையும் ஏற உள்ளேன். இதன் மூலம் உலகில் மிகக்குறுகிய காலத்தில் 7 மலைகளையும் ஏறிய சாதனையை படைக்க உள்ளதாகத்” என்று முத்தமிழ்ச் செல்வி தெரிவித்தார்.