வைகை ஆற்றில் குப்பை கொட்டுவோரை கண்காணிக்க கேமராக்கள்: மதுரை மாநகராட்சி திட்டம்

By KU BUREAU

மதுரை: மதுரை வைகை ஆற்றில் குப்பைகள் கொட்டுவோரை கண்காணிக்க , மாநகராட்சி நிர்வாகம் முதல் முறையாக ‘கண்காணிப்பு கேமராக்கள்’ வைக்க உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

மதுரை அண்ணா தோப்புத் தெருவை சேர்ந்தவர் எம்.நாகராஜன். இவர், மாநகராட்சியிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பல்வேறு கேள்விகளை கேட்டு பதில் பெற்றுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

கேள்வி; மாநகராட்சி எத்தகைய முறையில் குப்பைகளை மறுசுழற்சி செய்கிறது?

பதில்; மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என இரண்டு முறைகளில் தரம் பிரிக்கப்படுகிது என்று மாநகராட்சி கூறியுள்ளது.

கேள்வி; நெகிழி குப்பைகள் எப்படி சேமிக்கப்படுகிறது?

பதில்; நெகிழி குப்பைகள் சேகரித்து தரம் பிரிக்கப்ட்டு அதனை சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கேள்வி; நெகிழி குப்பைகளை சேகரிக்க மதுரை மாநகராட்சி ஏதெனும் தனியார் நிறுவனங்களை பணி நியமனம் செய்துள்ளதா?

பதில்; தனியார் நிறுவனத்திற்கு பணி நியமிக்கவில்லை.

கேள்வி; வைகை ஆற்றில் குப்பைக்கொட்டும் தனி நபர்கள், நிறுவனங்கள் மீது நிர்ணயிக்கப்பட்டுள்ள அபராத தொகை எவ்வளவு?

பதில்; அபராதத்தொகை ரூ.500 முதல் ரூ.5,000 வரை வசூல் செய்யப்படுகிறது.

கேள்வி; வைகை ஆற்றில் குப்பை கொட்டுபவர்களை கண்காணிக்க காமிரா ஏதேனும் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ளதா?

பதில்; தற்போது வைகை ஆற்றில் கண்காணிப்ப காமிரா எதுவும் இல்லை. முக்கியமான இடங்களில் கண்காணிப்பு காமிரா வைக்கும் திட்டம் முதல் முறையாக நடவடிக்கையில் உள்ளது.

கேள்வி; மதுரை மாநகராட்சி ஒரு மாதத்திற்கு எத்தனை டன் அளவு குப்பைகளை சேகரிக்கின்றனர் ?

பதில்; குப்பைகள் மற்றும் நெகிழி குப்பைகள் சரிசரியாக 25,500 டன் சேகரிக்கப்படுகிறது. இதில் 10 சதவீதம் நெகிழி குப்பைகள் பிரிக்கப்படுகிறது.

கேள்வி; இறக்கிற ஆடு, மாடு, நாய், குதிரைகள் எங்கு அடக்கம் செய்யப்படுகிறது?

பதில்; வெள்ளைக்கல் குப்பை கிடங்கில் ஆழமாக தோண்டி பாதுகாப்பாக இறக்கிற ஆடு, மாடு, நாய், குதிரைகள் புதைக்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE