சென்னையில் மெத்தம்பெட்டமைன் விற்பனை - மேலும் ஒருவர் கைது!

By KU BUREAU

சென்னை: வளசரவாக்கம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் வைத்திருந்த வழக்கில் ஏற்கனவே 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் கைதாகியுள்ளார். 5 கிராம் மெத்தம்பெட்டமைன், 4 மாத்திரைகள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சென்னை பெருநகர காவல், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (ANIU) தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு தனிப் படையினர் மற்றும் வளசரவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து ஜனவரி 23ம் தேதி அன்று, வளசரவாக்கம், ஆற்காடு சாலை, மாநகராட்சி அலுவலகம் அருகில் கண்காணித்து, அங்கு மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் மற்றும் கஞ்சா வைத்திருந்த சுபாஷ், கார்த்திக் (எ) கார்த்திகேயன், அரவிந்த் ஆகிய 3 நபர்களை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 6 கிராம் எடை கொண்ட மெத்தம்பெட்டமைன், 10 கிராம் கஞ்சா, 3 செல்போன்கள், 1 இருசக்கர வாகனம் மற்றும் பணம் ரூ.35,000 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய விக்னேஷ் என்பவரை ஜனவரி 24ம் தேதி அன்று கைது செய்து, அவரிடம் இருந்து 3 கிராம் மெத்தம்பெட்டமைன், 2 Ectasy மாத்திரைகள், 1 ஐபோன் மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து, வளசரவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, இவ்வழக்கில் தொடர்புடைய சேலைவாயல் பகுதியை சேர்ந்த ஜான்சன் மகன் ஜஸ்வீர் (34) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிராம் மெத்தம்பெட்டமைன், 4 Ectasy மாத்திரைகள், 20 கிராம் கஞ்சா, மெத்தம்பெட்டமைன் பயன்படுத்த உதவும் OCBC உபகரணம்-2 மற்றும் 2 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது, கைது செய்யப்பட்ட எதிரி ஜஸ்வீர் விசாரணைக்குப் பின்னர் நேற்று (26.01.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

மேற்படி வழக்கில் இது வரை மொத்தம் 5 எதிரிகள் கைது செய்யப்பட்டு, மொத்தம் 14 கிராம் மெத்தம்பெட்டமைன், 30 கிராம் கஞ்சா, 6 Ectasy மாத்திரைகள், 1 ஐபோன் உட்பட 6 செல்போன்கள், பணம் ரூ.35,000 மற்றும், 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE