தன் தந்தை புகழ் பாட வாரி அளிக்கும் முதல்வருக்கு பொங்கல் பரிசு வழங்க மனதில்லை: திண்டுக்கல் சீனிவாசன்

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: மக்கள் வரிப்பணத்தில் தனது தந்தை கருணாநிதி புகழ் பாட வாரி அளித்த முதல்வர் ஸ்டாலினுக்கு, பொங்கல் பரிசாக மக்களுக்கு 100 ரூபாய் வழங்க கூட மனதில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. திண்டுக்கல் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜேஷ்கண்ணா தலைமை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:

கடந்த மூன்று ஆண்டுகளில் 12 ஆயிரம் கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்யும் கோப்பில் கையெழுத்துப் போட்டுள்ளாரா, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்கும் கோப்பில் கையெழுத்து போட்டுள்ளாரா, சமையல் எரிவாயு மானியத்தில் 100 ரூபாய் தருவேன் என்று கூறினாரே அதில் கையெழுத்து போட்டு உள்ளாரா.

மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்வதாக கூறினாரே அந்த கோப்பில் கையெழுத்திட்டு இருக்கிறாரா, பகுதி நேர ஆசிரியர்களை முழுநேர ஆசிரியராக மாற்றுவேன் என்று கூறினாரே அதற்கு கையெழுத்திட்டு இருக்கிறாரா. அந்த வகையில் தேர்தல் நேரத்தில் கொடுத்த 520 வாக்குறுதியில் எதையுமே நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக மூன்று முறை மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, குப்பை வரி உயர்வு இப்படி மக்களின் வரிப்பணத்திற்காக கையெழுத்திட்டவர் தான் ஸ்டாலின். மக்கள் வரிப்பணத்தில் தனது தந்தை கருணாநிதி புகழ் பாட வாரி அளித்த ஸ்டாலினுக்கு பொங்கல் பரிசாக 100 ரூபாய் கூட வழங்க மனதில்லை, என்றார்.

கூட்டத்தில் முன்னாள் மேயர் மருதராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE