மதுரை: ‘டங்ஸ்டன்’ ஏலம் ரத்து செய்யப்பட்டதற்காக முதல்வர் ஸ்டாலினை நேரில் பாராட்டுவதற்காக இன்று அரிட்டாபட்டி, வல்லாளபட்டியில் சுற்றுவட்டார கிராமத்தினர் திரளானோர் பங்கேற்கின்றனர்.
மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி, வல்லாளபட்டி உள்ளிட்ட 48 கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் பகுதியில் அமைய இருந்த ‘டங்ஸ்டன்’ சுரங்கம் ஏலதத்தை மத்திய சுரங்கத்துறை ரத்து செய்தது. இதற்காக கிராம மக்கள் நடத்தும் பாராட்டு விழாவில் பங்கேற்க இன்று முதல்வர் மதுரை வருகிறார்.
இது குறித்து போலீஸார், அலுவலர்கள் கூறியது: இன்று மதியம் ஒரு மணிக்கு மதுரை விமானம் வரும் முதல்வரை அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், அலுவலர்கள் வரவேற்கின்றனர். அங்கிருந்து கார் மூலம், ‘ரிங்’ ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கும் முதல்வர், பிற்பகல் 3 மணியளவில் அரிட்டாப்பட்டி, வல்லாளபட்டி கிராமங்களுக்கு செல்கிறார். அங்கு மேலூர் சுற்றுப்பகுதி கிராமத்தினர் முதல்வரை வரவேற்கின்றனர்.
அப்பகுதி மக்கள், விவசாயிகள், டங்ஸ்டனுக்கு எதிராக போராடியவர்களை முதல்வர் சந்திக்கிறார். இரவு 7 மணியளவில் விமானத்தில் முதல்வர் சென்னை புறப்படுகிறார். இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க கிராம மக்கள் ஏற்பாடு செய்துள்ளதால் என்பதால் திமுகவினர் பங்கேற்கவில்லை” என்றனர்.