வேங்கைவயல் விவகாரத்தில் நாங்கள் சிபிஐ விசாரணை கேட்கவில்லை: முத்தரசன் பேச்சு

By KU BUREAU

தருமபுரி: வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

தருமபுரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், “வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவை கலந்த விவகாரம் தொடர்பாக தற்போது 3 பேர் பெயரை காவல்துறை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என விசிக, சிபிஎம் கட்சியினர் கோரியுள்ளனர். ஆனால், இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ விசாரணை கோரவில்லை. வழக்கின் போக்கினை பொறுத்திருந்து பார்ப்போம்.

வாழும் காலத்திலேயே பெரியார் கல்லடிகள், சொல்லடிகள், செருப்படிகள் பலவற்றை பார்த்தவர். இன்று சீமான் பேசுவதால் பெரியார் தாழ்ந்து விட மாட்டார். சீமான் மட்டுமல்ல இன்னும் யார் பெரியார் பற்றி பேசினாலும் கவலையில்லை. மேடைகளில் பெரியார் பல மணி நேரம் பேசினாலும் தன் பேச்சை முடிக்கும்போது, ‘நான் பேசுவது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை ஏற்க வேண்டாம். சுயமாக சிந்தித்து உடன்பாடு இருந்தால் மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறுவார். எனவே, பெரியார் பேச்சுகளில் சீமானுக்கு உடன்பாடு இல்லையெனில் அதை ஏற்காமல் தவிர்த்து விடலாமே. கடந்த காலங்களில் திமுகவை விட, ஆசிரியர் கி.வீரமணியை விட, எங்களை விட பெரியாரை உச்சத்தில் புகழ்ந்தவர் சீமான் தான்” என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE