கடலூர்: சிதம்பரத்தில் மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வாயிலில் மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலை உள்ளது. இந்த சிலைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகி தினத்தில், அனைத்து கட்சிகளை சார்ந்த தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று (25.01.25) நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் தினத்தில் திமுக சார்பில் நகர செயலாளர் செந்தில்குமார் தலைமையில் சிதம்பரம் காந்தி சிலையிலிருந்து அக்கட்சியினர் இருசக்கர வாகன பேரணியுடன் சென்று அண்ணாமலை பல்கலைக்கழக வாயிலில் உள்ள மொழிப்போர் தியாகி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி சிதம்பரம் நகர நகர மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன்,அப்பு சந்திரசேகரன், ஊராட்சி ஒன்றிய செயலாளர் சங்கர், ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
» அளவுக்கதிகமான பூச்சிக்கொல்லி: 4 டன் மிளகாய் தூளை திரும்பப் பெற்றது பதஞ்சலி நிறுவனம்!
» தாய்மொழி காக்க தன்னெழுச்சியுடன் போராடும் இனம் தமிழினம்: விஜய் பெருமிதம்
இதே போல் அதிமுக சார்பில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கேஏ பாண்டியன் தலைமையில் காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக ராஜேந்திரன் சிலைக்கு சென்று 200க்கும் மேற்பட்டவர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் அரங்கத் தமிழ்மொழி தலைமையில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள். மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் குணசேகரன் ராமலிங்கம், வழக்கறிஞர் மோகனசுந்தரம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மற்றும் பல்வேறு அமைப்பு சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்