“இனி பெரியார் பற்றி எங்களுக்கு கவலை இல்லை; நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள்”- உதயநிதி பேச்சு!

By KU BUREAU

சென்னை: இனிமேல் பெரியார் பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. பெரியாரை தூற்றுவோரை எல்லாம் நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள். அதற்கு இனிமேல் நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வீர்கள் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாதக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் திமுக-வில் இணையும் விழா இன்று நடைபெற்றது. இதில் 3,000 பேர் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இந்த நிகழ்வில் திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: ”இன்னும் 13-14 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வரப்போகிறது. பொதுவாக தேர்தல் வரும் நேரங்களில் ஆளுங்கட்சியை எதிர்த்து எதிரணிகள் தான் ஒன்று சேர்வார்கள். அதுதான் வழக்கம். ஆனால், வித்தியாசமாக எதிர்க்கட்சியில் இருந்த நீங்கள், உங்கள் அனைவரையும் ஆளுங்கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளீர்கள். இதன் மூலம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவு என்ன என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.

இன்று கட்சியில் இணைந்துள்ள நீங்கள், வெறும் சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவை மட்டும் கருத்தில் கொண்டு திமுகவில் இணையவில்லை, கட்சியின் கொள்கை மற்றும் லட்சியங்களையும், தமிழக முதல்வரின் தலைமையையும் ஏற்று இணைந்துள்ளீர்கள். இதுபோல நீங்கள் திமுகவில் இணையும்போது, கண்டிப்பாக எதிர்க்கட்சிகளுக்கு வயிற்றெரிச்சல் வரத்தான் செய்யும். அதற்காகவே, என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

டங்ஸ்டன் சுரங்க ஏலம் தொடர்பான விவகாரம் வந்தபோது, சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து முதல்வர் மக்களை நேரடியாக சென்று சந்திக்குமாறு கூறினார். மேலும் சட்டசபையில், திமுக ஆட்சி இருக்கும் வரை மதுரையில் டங்ஸ்டன் திட்டம் நிறைவேற்றப்படாது என்று கூறினார். அதை செய்தும் காட்டி மக்களோடு நின்று மக்களுக்கான ஆட்சியை கொடுத்து கொண்டிருக்கிறார். மக்களுக்கான பல்வேறு திட்டங்களை முதல்வர் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

இனிமேல் பெரியார் பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. பெரியாரை தூற்றுவோரை எல்லாம் நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள். அதற்கு இனிமேல் நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வீர்கள், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்வோம் என்று இலக்கு நிர்ணயித்துள்ளார். இன்று கட்சியில் இணைந்துள்ளவர்களின் எழுச்சியைக் காணும் போது 200 அல்ல 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெல்லும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது” என்று உதயநிதி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE