திருப்பரங்குன்றம் மலையில் அசைவம் சாப்பிட்ட நவாஸ் கனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாஜக புகார்

By KU BUREAU

ராமநாதபுரம்: திருப்பரங்குன்றம் மலை மீது அசைவ உணவு உண்ட நவாஸ் கனி எம்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

புகார் அளித்த பின்னர் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாவட்டத் தலைவர் தரணி முருகேசன், ”நவாஸ் கனி எம்பி இந்துக்களின் புனித தலமான திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி தனது உடன் வந்தவர்களுடன் அசைவ உணவு சாப்பிட்டுள்ளார். மலை மீது ஏறும்போது அங்கிருந்த போலீஸாரை மிரட்டும் தொனியில் அசைவ உணவை மேலே கொண்டு வருபவர்களை தடுக்கக் கூடாது என பேசியுள்ளார். மதக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் அவர் செயல்பட்டுள்ளார்.

மேலும், திருப்பரங்குன்றம் மலையின் புனிதத் தன்மையை கெடுத்துள்ளார். மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் அவர் செயல்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாகக் கருதக் கூடிய இந்த மலை ஒரு குடைவரைக் கோயிலாகும். முருகப் பெருமானின் திருமேனி அந்த மலையிலேயே செதுக்கப்பட்டிருக்கிறது.

அந்த மலையின் மகத்துவத்தை வேண்டுமென்றே குறைத் திருக்கிறார். மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட நவாஸ் கனி எம்பி மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தரணி முருகேசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE