நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடிவாரன்ட்களை முறையாக அமல்படுத்த புதிய செயல் திட்டம்: போலீஸாருக்கு உத்தரவு

By KU BUREAU

நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடிவாரன்ட்களை முறையாக அமல்படுத்தும் வகையில் புதிய செயல் திட்டம் வகுக்குமாறு போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

கீழ்ப்பாக்கம் சரகத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பதியப்பட்டுள்ள பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வடிவேலு என்பவர், தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் அருள்செல்வம், சிறையில் உள்ள வடிவேலு மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதையும், மற்றொரு காவல் நிலைய வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகாமல் இருப்பதையும், ஏற்கெனவே பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்ததையும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்து, அவருக்கு ஜாமீன் தரக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.

காவல் நிலையங்களுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாததுதான் இதுபோன்ற பிரச்னைகளுக்கு காரணம் என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் சரக துணை ஆணையர் நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்குமாறு நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கீழ்ப்பாக்கம் சரக துணை ஆணையராகப் பொறுப்பு வகிக்கும், மயிலாப்பூர் துணை ஆணையர் ஹரிச்சரண் நேரில் ஆஜரானார்.

அவரிடம் நீதிபதி, அதிநவீன தொழில்நுட்பம் உள்ள இந்த காலகட்டத்திலும் ஒரே சரகத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் ஒருங்கிணைப்பு இல்லாதது ஏற்றுக்கொள்ள முடியாதது என ஆதங்கம் தெரிவித்தார். மேலும், நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடிவாரன்ட்களை முறையாக அமல்படுத்தும் வகையில், புதிய செயல் திட்டம் வகுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திய நீதிபதி, விசாரணையை ஜன.31-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE