சென்னை: “நான் முதல்வராக இருக்கும்வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன். சட்டப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம். மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முன்னதாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டியை, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் குழுவினர் டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம பகுதியில் அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தளமும் பல கலாச்சார பாரம்பரிய தளங்களும் உள்ளன என்று மத்திய அமைச்சரிடம் தெரிவித்தனர்.
சுரங்க அமைச்சகம் 2024 டிச.24 தேதியிட்ட ஒரு செய்திக் குறிப்பில், ‘டங்ஸ்டன் ஏல நடைமுறைக்குப் பிறகு, அப்பகுதியில் பல்லுயிர் பாரம்பரிய தளம் உள்ளது என்ற அடிப்படையில் ஏலத்துக்கு எதிராக கருத்துகள் பெறப்பட்டுள்ளன’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜன.25-ம் தேதி அன்று நடைபெற்ற சந்திப்பின் போது, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்யுமாறு அப்பகுதி மக்களின் சார்பில் சென்றிருந்த விவசாயிகள் குழுவினர், மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்தக் குழுவினரின் கோரிக்கைகளை பொறுமையாகக் கேட்டறிந்த மத்திய அமைச்சர், பல்லுயிர் பாரம்பரிய பாதுகாப்புக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார். விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, இப்பகுதியில் பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம ஏலத்தை ரத்து செய்ய சுரங்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது’ என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
» தூத்துக்குடியில் ரூ.20 கோடி ‘ஹசீஷ்’ போதைப் பொருள் பறிமுதல் - சிஐஎஸ்எப் வீரர் உள்பட 4 பேர் கைது
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “நான் முதல்வராக இருக்கும்வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன். சட்டப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம். மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது. இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது; மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க.வும் துணைபோகக் கூடாது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.