மதுரை: மதுரை மாநகராட்சிக்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் ‘கழிவுநீர் ஜெட் ரோடிங்’ வாகனத்தை ஆணையாளர் தினேஷ் குமார் நகரச் சாலையில் ஓட்டி பரிசோதித்தார்.
மதுரை 100 வார்டுகளில் பாதாள சாக்கடை அடைப்பு பிரச்சனை, மாநகராட்சிக்கு அன்றாடம் பெரும் சவாலாக உள்ளது. இவ்வடைப்புக்களை சரி செய்வதற்கு மாநகராட்சியில் கழிவுநீர் உறிஞ்சு வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. அடைப்பை சரி செய்வதற்கு போதுமான வாகனங்கள் இல்லை. அந்த அடிப்படையில் மாநகராட்சி மண்டலம் 5-க்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் ஏற்படும் பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்குவதற்கு ‘கழிவுநீர் ஜெட் ரோடிங்’ வாகனம் ரூ.63.48 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மாநகராட்சி வளாகத்தில் நடந்தது. மேயர் இந்திராணி, இந்த புதிய வாகனத்தை பயன்பாட்டிற்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், இந்த புதிய வாகனத்தை பரிசோதனை ஓட்டம் பார்க்கும் வகையில், திடீரென்று அவரே அதனை எடுத்துக் கொண்டு நகரின் சில பகுதிகளுக்கு ஓட்டிச் சென்று மீண்டும் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ”பாதள சாக்கடை அடைப்பை சரி செய்ய, இந்த மாதிரி வடிவமைக்கப்பட்ட வாகனத்தை தான் ஆர்வமாக வாங்கினோம். வந்தவுடன் அதன் ரன்னிங் செயல்பாட்டை பரிசோதிக்க, நானே ‘டெஸ்ட் ரைடு’ செய்தேன். நான் ஏற்கணவே கனரக வாகன உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்தவன் என்பதால் கனரக வாகனங்களை இயக்கும் பழக்கம் உண்டு, ’’ என்றார்.
புதிய வாகனத்தை டிரைவர்களை ஓட்டச்சொல்லி கருத்துக் கேட்காமல், ஆணையாளர் தானே ஒரு டிரைவராக ஓட்டிச் சென்று பார்த்தது, நிகழ்ச்சி வந்திருந்த மேயர், அதிகாரிகள், பணியாளர்களை நெகிழ்ச்சிடைய செய்தது. இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் சுவிதா, உதவி ஆணையாளர் ராதா, செயற்பொறியாளர்கள் பாக்கிய லட்சுமி, சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.