இபிஎஸ்-சுடன் நேரடியாக பேசினாலே அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துவிடும்: நயினார் நாகேந்திரன் பேச்சு

By KU BUREAU

திருநெல்வேலி: எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியிடம் நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்து விடும். வருமானவரித் துறை சோதனை உள்ளிட்டவைகளை நடத்தித் தான் கூட்டணியை அமைக்க வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை என்று தமிழக சட்டப்பேரவை பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், ”அரசு செய்யும் அனைத்து நல்ல திட்டங்களையும் நாங்கள் ஆதரிப்போம். நாங்கள் எதிரி கட்சி அல்ல, எதிர்க்கட்சி தான். தமிழகத்தில் கடன் கட்டுக்குள்தான் இருக்கிறது என 3 மாதங்களுக்கு பின்னர் தமிழக அரசால் சொல்ல முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழக அரசிடம் பணம் இல்லாத நிலையில் தான் வரி வசூல் தாமத கட்டணம், மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் கூடுதலாக வசூல் செய்யப்பட்டு வருகிறது.

2026 தேர்தலில் அரசின் கட்டண உயர்வு, வரி வசூல் பிரச்சனை, பெண்களுக்கு பாதுகாப்பு இன்மை போன்ற பல்வேறு பிரச்சினைகள் கட்டாயம் எதிரொலிக்கும். எனது தொகுதியில் மக்களுக்கான பிரச்சினைகள் குறித்து சட்டப் பேரவையில் கேட்டால் நிறைவேற்றி கொடுக்கப்படுகிறது. ஆனால் ஒட்டுமொத்த தமிழகத்தின் மக்களின் பிரச்சினைகள் முழுவதுமாக நிறைவேறியதா என்றால் அது இல்லை. கூட்டணி குறித்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியிடம் நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்து விடும்.

வருமானவரித் துறை சோதனை உள்ளிட்டவைகளை நடத்தித்தான் கூட்டணியை அமைக்க வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை. திருப்பரங்குன்றம், சிக்கந்தர் மலை என்ற விவகாரம் இரு சமுதாயத்திற்கு இடையேயான பிரச்சினை. இந்த விவகாரத்தில் அரசியலை புகுத்த கூடாது. ராமநாதபுரம் எம்பி, மணப்பாறை எம்எல்ஏ போன்றோர் அந்த பிரச்சினையை கையில் எடுத்து அங்கு சென்றதால் நாங்களும் அங்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE