சென்னை: ஜனவரி 25ம் மற்றும் 26 ஆகிய இரு நாட்களிலும் மெரினா கடற்கரை, ராஜ் பவன் முதல் மெரினா கடற்கரை வரை மற்றும் தமிழக முதல்வர் இல்லத்தில் இருந்து மெரினா கடற்கரை வரையில் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு ட்ரோன்கள் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”ஜனவரி 26ம் தேதி அன்று மெரினா கடற்கரையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை அருகில் 76வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் மற்றும் தமிழக முதல்வர் கலந்து கொள்ள உள்ளனர்.
2023ம் ஆண்டு பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா பிரிவு 163-ன் கீழ் ட்ரோன்கள் ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோலைட் ஏர்கிராப்ட், பாரா கிளைடர்ஸ். பாரா மோட்டார்ஸ். ஹேன்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகர காவல் எல்லையில் பறக்க விட 2024ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி முதல் 2025ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி வரை தடை செய்யப்பட்ட ஆணை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
எனவே, பாதுகாப்பு அலுவலின் பொருட்டு சென்னையில் ஜனவரி 25ம் மற்றும் 26 ஆகிய இரு நாட்களிலும் (அரசு விழாக்கள் தவிர) i) மெரினா கடற்கரையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், ii) ராஜ் பவன் முதல் மெரினா கடற்கரை வரை மற்றும் iii) தமிழக முதல்வர் அவர்களின் இல்லத்தில் இருந்து மெரினா கடற்கரை வரையில் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு (“RED ZONE”) அந்த பகுதிகளில் RPAS ட்ரோன்கள் மற்றும் எந்தவிதமான பொருட்களும் பறக்கவிட தடை விதிக்கப்படுகிறது” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
» உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் - மாணவர்களுடன் காலை உணவு அருந்திய திருவள்ளூர் ஆட்சியர்!