உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் - மாணவர்களுடன் காலை உணவு அருந்திய திருவள்ளூர் ஆட்சியர்!

By இரா.நாகராஜன்

திருவள்ளூர்: ஆர்கே பேட்டை வட்டத்தில் நேற்று காலை முதல் இன்று காலை வரை நடந்த "உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், இன்று காலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுடன் காலை உணவு அருந்தினார்.

"உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட" முகாம் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்.கே பேட்டை வட்டத்தில் நேற்று காலை 9 மணி முதல், இன்று காலை 9 மணிவரை நடைபெற்றது. இம்முகாமில், நேற்று அம்மையார்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2.36 கோடி மதிப்பில் 10 வகுப்பறை கட்டிடம் அமைக்கும் பணி, மாணவர்களின் வருகை பதிவு, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, ஆர்.கே பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயன்பெற்ற மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வீடு கட்டுவது தொடர்பாக ஆலோசனை வழங்கினார். பிறகு, அவர் அம்மையார்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆண்கள் ஆதி திராவிடர் நல விடுதி, பாலபுரம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படுத்தப்படும் கலைஞரின் கனவு இல்லம் திட்ட பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து, இன்று காலை ஆர்.கே பேட்டையில், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை அகற்றி நுண்ணுயிர் உரம் தயாரிப்பு பணிக் கூடத்தை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, அவர் ஆர்.கே பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுடன் காலை உணவை அருந்தி, முதலமைச்சரின் காலை உணவு திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். மேலும், மாவட்ட ஆட்சியர், பள்ளிக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரவும், அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை இன்று முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

மாவட்ட ஆட்சியரின் இந்த ஆய்வுகளின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், உதவி ஆட்சியர் ஆயுஷ் குப்தா, தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) கணேசன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் தேவன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மோகனா, திருத்தணி கோட்டாட்சியர் தீபா, ஆர்.கே பேட்டை வட்டாட்சியர் ராஜேஷ்குமார், ஆர்.கே பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழ்ச்செல்வி, செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE