திருப்பரங்குன்றம் மலை மீது அசைவ உணவு; நவாஸ் கனியின் செயல் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும்: எல்.முருகன் கண்டனம்

By KU BUREAU

சென்னை: திருப்பரங்குன்றம் கோயில் மலையில் அமர்ந்து, தமிழகத்தின் மத நல்லிணக்க பண்பாட்டை சீர்குலைக்கும் வகையில் அசைவ உணவு உண்ட மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி அவர்களின் செயல்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழர் கடவுளான முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் மலையில் அமர்ந்து, தமிழகத்தின் மத நல்லிணக்க பண்பாட்டை சீர்குலைக்கும் வகையில் அசைவ உணவு உண்ட நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறேன்.

மத நல்லிணக்கம் பற்றி மாவட்ட ஆட்சியரிடம் பேசியிருப்பதாக கூறிவிட்டு, இந்து சமுதாய மக்களின் புனித மலையாக போற்றப்படுகின்ற திருப்பரங்குன்றம் முருகன் மலையில் அமர்ந்து கும்பலாக சென்று அசைவம் சாப்பிட்டுள்ளார். தொடர்ந்து மத நல்லிணக்க பண்போடு அமைதியாக இருந்து வந்த மக்களிடத்தில் பிரிவினையை தூண்டுகின்ற நோக்கில், ஒரு பிரிவினை வாதியைப் போல் செயல்பட்டிருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் விரும்பத்தகாத சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை திசை திருப்பும் நோக்கத்தோடு, திருப்பரங்குன்றம் மலை மீது சென்று அசைவ விருந்து அளிக்க முற்பட்டவர்களால் ஏற்பட்ட பதற்றமான சூழலை, ரகசியப் பிரமாணம் மேற்கொண்டு பதவியேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் பதற்றமானதாக மாற்றுவது எப்படி ஏற்கத்தக்கதாகும்.

மேலும், தமிழகத்தில் எல்லோருக்குமான மற்றும் சமூக நீதி ஆட்சி வழங்குவதாக கூறிக்கொள்ளும் போலி திராவிட மாடல் திமுக அரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும், இந்து சமுதாய விரோதப் போக்கை கைவிடப் போவதில்லை என்பதும் இன்று நடந்த சம்பவத்தின் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இதுபோன்ற செயல்பாடுகள் தொடர்வது சமூகத்தின் அமைதியை நிச்சயம் சீர்குலைக்கும். ஆகவே, நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி மேற்கொண்ட இந்தச் செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு, இச்செயல் புரிந்ததற்காக தமிழக மக்களிடத்தில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்பதையும் கூறிக் கொள்கிறேன்” என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE