கூட்டுறவுத் துறையின்கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் ஏற்படும் இழப்பு, பராமரிப்பு ஆகியவற்றுக்கு இந்த நிதியாண்டில் ரூ.300 கோடி முன்பண மானியத்தை விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு மற்றும் உணவுத்துறை சார்பில் தமிழகத்தில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் இயங்குகின்றன. இதில், கூட்டுறவுத் துறை சார்பில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளில் ஏற்படும் பொருள் இழப்புகள், கட்டிட பராமரிப்பு போன்றவற்றுக்காக ரூ.300 கோடியை முன்பண மானியமாக வழங்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அரசுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பினார்.
இதை பரிசீலித்த தமிழக அரசு இரண்டு பிரிவாக, ரூ.240 கோடியே 12 லட்சத்து 23,297 மற்றும் ரூ.59 கோடியே 87 லட்சத்து 76,703 என ரூ.300 கோடியை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. இந்த தொகை தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மூலம் மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டு, அங்கிருந்து நியாயவிலைக் கடைகளுக்கு வழங்கப்படும்.
» திருச்செந்தூர் கடற்கரையில் கடல் அரிப்பை தடுக்க தேசிய கடலோர ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் ஆய்வு