திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கடல் அரிப்பை தடுப்பது தொடர்பாக, தேசிய கடலோர ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
திருச்செந்தூர் கோயில் கடற்கரைப் பகுதியில் அடிக்கடி கடல் அரிப்பு ஏற்படுகிறது. இதைத் தடுப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு, சென்னை ஐஐடி, மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் (என்சிசிஆர்) ஆகியவற்றிடம் தமிழக அரசு கேட்டுக்கொண்டது.
அதன்பேரில், ஐஐடி குழுவினர் திருச்செந்தூர் கோயில் கடற்கரைப் பகுதியில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, தேசிய கடலோர ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ராமநாதன் தலைமையில், 9 விஞ்ஞானிகள் கொண்ட குழுவினர் நேற்று திருச்செந்தூர் கடற்கரைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், விஞ்ஞானி ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருச்செந்தூர் கடற்கரைப் பகுதியில் திடீரென அரிப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆராய்வதற்காக, முதல்கட்ட ஆய்வை நடத்தியுள்ளோம். நாளை (ஜன. 23) ட்ரோன் மூலம் விரிவான ஆய்வு நடத்தி, சில தகவல்களை சேகரிக்கவுள்ளோம். பின்னர் எங்கள் மையத்தின் இயக்குநரிடம் ஆலோசித்துவிட்டு, வரும் 25-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிப்போம்.
» 17 வயது சிறுவனை கடத்திய பெண்: பெரியபாளையம் அருகே போக்சோவில் கைது
» பாளை. கூட்டத்தில் வாட்டர் பாட்டில்களுக்காக திமுகவினர் முண்டியடித்ததால் பரபரப்பு
1990 முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டம் தொடர்பாக செயற்கைக்கோள் வரைபடம் மூலம் ஆய்வு செய்ததில், தமிழக கடற்கரை 33 சதவீதம் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இயற்கையின் போக்கில் ஏதாவது தடை ஏற்பட்டால், ஓரிடத்தில் கடல் அரிப்பும், மற்றொரு இடத்தில் மணல் சேர்க்கையும் ஏற்படும்.
திருச்செந்தூர் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்புக்கு பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள கடல் அலைகளின் தாக்கம், அடிக்கடி ஏற்படும் புயல், சூறாவளி, கடலுக்குள் தூண்டில் வளைவு அமைத்தல் போன்றவை காரணமாக இருக்கலாம். அறநிலையத் துறை மற்றும் மீன்வளத்துறை கேட்டுக் கொண்டதன்பேரில் இந்த ஆய்வை நடத்துகிறோம். நீண்டகால ஆய்வு தேவை எனக் கேட்டுக்கொண்டால், தொடர்ந்து ஆய்வு மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.