செங்கல்பட்டு: தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த நாட்களில் இந்தியா முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் விபத்து ஏற்படாமல் இருப்பதை தடுக்கும் பொருட்டு, வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு வகையான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான தேசிய சாலை பாதுகாப்பு மாதம் 2025 தினத்தை முன்னிட்டு, இன்று (ஜன22) செங்கல்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர்களுக்கான முதலுதவி சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. செங்கல்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இளங்கோ முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமில், பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் கலந்து கொண்டு, விபத்து காலங்களில் உயிருக்குப் போராடும் மனித உயிர்களுக்கு, எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளித்து உயிர் காப்பது என்பது தொடர்பான செய்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.
பெரும்பாலும் விபத்து காலங்களில் போதிய முதல் உதவி சிகிச்சை உரிய நேரத்தில் கிடைக்காத காரணமாகவே உயிரிழப்புகள் அதிகரிப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதனை தடுக்கும் பொருட்டு மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமையில் செங்கல்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பேருந்து, லாரி, கார், ஆட்டோ உள்ளிட்ட பலதரப்பட்ட வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள் என்று சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
» தமிழகம் திவாலாகிவிட்டதாக புது புரளியை கிளப்பி வருகிறார் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
» டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யும் சாதகமான முடிவு அறிவிக்கப்படும்: அண்ணாமலை அறிவிப்பு
எதிர்காலத்தில் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்காகவே இது போன்ற விழிப்புணர்வு முகாங்கள் ஒன்றிய அரசால் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. உடன் வாகன தணிக்கை ஆய்வாளர் ஹமீதா பானு மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நேற்று செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை யொட்டி இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தலைக் கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து நேற்று விழிப்புணர்வு பேரணி செங்கல்பட்டில் நடைபெற்றது.
பேரணியை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து தலைக் கவசம், சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம், வாகன ஓட்டிகளிடம் வழங்கப்பட்டது. ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, பரனூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் வரை சென்றது.