’தரக்குறைவாக பேசுகிறார்’ - உதகை அரசுக் கல்லூரி முதல்வரை கண்டித்து பேராசிரியர்கள், ஊழியர்கள் போராட்டம்!

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை: உதகை அரசுக் கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்களை அக்கல்லூரியின் முதல்வர் தரக்குறைவாக பேசுவதாக கூறி கண்டன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு கலைக்கல்லூரி 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு நீலகிரி மலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களை சார்ந்த மாணவ-மாணவிகள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இளங்கலை மற்றும் முதுகலை படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை மாணவர் சேர்க்கையில், தாங்கள் விண்ணப்பித்த பாடப்பிரிவு கிடைக்காதபோது, அடுத்து கிடைத்த பாடப்பிரிவில் சேர்ந்துள்ளனர்.

இதன் பின்னர் அடுத்தடுத்த கலந்தாய்வுகளின்போது அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் காலியிடம் இருந்தால் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டு அந்த பாடப்பிரிவிற்கு மாறி உள்ளனர். இவ்வாறு ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு மாறுவதற்காக மாணவர்களிடம் பணம் வசூலித்த குற்றச்சாட்டில் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதை தொடர்ந்து கல்லூரிக்கு புதிய முதல்வராக ராமலட்சுமி என்பவர் கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். இந்நிலையில், உதகை அரசு கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களை அவதூறாகவும் தரக்குறைவாகவும் கல்லூரி முதல்வர் ராமலட்சுமி பேசுவதாக குற்றம் சாட்டி இன்று கல்லூரி வளாகத்தில் பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்துகொண்டு கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள் கூறியதாவது: ''இந்த முதல்வர் கல்லூரியில் சேர்ந்தது முதல் பேராசிரியர்கள் பணியாளர்கள் ஆகியோரை அவதூறாக பேசி வருகிறார். சமீபத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் பெண் ஊழியரை மிகவும் தரக்குறைவாக பேசி உள்ளார். இதனால் அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே கல்லூரி முதல்வரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.'' இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து முதல்வர் ராமலட்சுமி கூறும் போது, ''கல்லூரி நிர்வாகம் சரியாக இயங்குவதற்காக அனைவரிடமும் பணிகளை துரிதப்படுத்துகிறேன். யாரையும் அவதூறாக தகாத வார்த்தைகளால் இதுவரை நான் பேசியது கிடையாது. கல்லூரி மாணவ, மாணவிகள் யாரும் இது போல் குற்றச்சாட்டு தெரிவிக்கவில்லை. நான் தென் மாவட்டத்தை சேர்ந்தவள் என்பதால் என்னுடைய வார்த்தைகள் தவறாக புரிந்து கொல்லப்படுகிறது'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE