சென்னை: பெரியாரால் தமிழ், தமிழருக்கு நடந்த ஒரு நன்மையைக் கூறுங்கள். பெரியார், திராவிடம் இல்லாமல் அரசியல் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால், அவை எதுவும் இல்லாமல் தான், தனித்து நின்று மூன்றாவது பெரிய கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இன்று சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது,"என்னுடைய கருத்து தவறு என்றால், பெரியாரின் கருத்துதான் தவறு. நான் புதிதாக ஒரு கருத்தைக் கூறவில்லை. பெரியார் ஏற்கெனவே பேசியதை எடுத்து பேசுகிறோம். அதில் என்ன தவறாகிவிட்டது. எனவே, அந்த கருத்துகள் தவறு என்றால் அதற்கு பெரியார்தான் பொறுப்பேற்க வேண்டும். எது தவறு என்று கூற வேண்டும்.
பெரியார் குறித்து பேசியதற்காக என் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.
என்னிடம் கேட்கும்போது, பெரியார் பேசியதற்கான ஆதாரங்களை நான் காட்டுவேன். எதை ஆதாரமாக வைத்து பேசினேன் என்று கூறுவேன். திருமுருகன் காந்தி பேசாததா? நான் பேசிவிட்டேன். பெரியாரை அதிகமாக விமர்சித்தது திமுக-தான் என்று அவர் பேசியிருக்கிறார். அதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள். என்னுடைய போட்டோவை எடிட் செய்து கொடுத்ததாக கூறும் நபர் யார்? 15 வருடமாக அவர் எங்கு போய் இருந்தார்.
என்னுடைய போட்டோவை ஏன் அவர் எடிட் செய்து கொடுக்க வேண்டும் ? அதற்கான தேவை என்ன ? எங்கிருந்து எடுத்துக் கொடுத்தார் ? அந்தப் படத்தை எப்படி வெட்டி ஒட்டிக் கொடுத்தார். 15 வருடங்களாக இவர்கள் எல்லாம் எங்கே படுத்திருந்தனர். அந்தப்படம் முதன்முதலில் ஆனந்த விகடனில் வந்தபோதே இதை ஏன் கூறவில்லை? உங்கள் பெரியார் மீது அடி விழுந்தவுடனே, இங்கே பிரபாகரன் பொய் என்று கூறுகிறார்கள். அதுதான் பெரியாரா, பிரபாகரனா என மோதுவது என்றாகிவிட்டதே, மோத வேண்டியது தானே?
» கோமியம் மனிதர்கள் பயன்படுத்த உகந்தது என சான்றிதழ் பெறுவார்களா? - செல்வப்பெருந்தகை கேள்வி
» ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வரானவர்: இபிஎஸ்சை கடுமையாக விமர்சித்த செந்தில்பாலாஜி!
பெரியாரின் மெயின் பிரான்ச், ஹோல்சேல் டீலரே பேசாமல் இருக்கிறார். பெட்டிக்கடைக்காரர்கள் ஏன் இவ்வளவு துள்ளி வருகிறீர்கள்? எனவே ஆசிரியர் வீரமணியை வரச்சொல்லுங்கள். சுப.வீரபாண்டியன், பெ.மணியரசன் நடத்திய உரையாடல் போல ஏற்பாடு செய்யுங்கள். நீங்கள் கேள்வியை கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன். ஆனால், அங்கு யாரும் இருப்பது போன்று தெரியவில்லையே, இருந்தால் விவாதத்துக்கு வந்திருப்பார்களே? வாயைத்திறந்தால், இந்த திராவிட பொய் புரட்டுக்காரர்கள் அவதூறை பேசுகின்றனர்.
நாம் தமிழர் கட்சி என் தாத்தாவுடையது. ஒவ்வொரு தமிழனுக்கும் உரிமை உடையது. சோவுக்கும், குருமூர்த்திக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் சம்பந்தம் என்ன இருக்கிறது.கட்டுக்கதையை கூறுகின்றனர். நான் அவர்களுடன் இருந்து வளர்ந்தவன் என்ற அடிப்படையில் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதால் தானே இத்தனை பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
பெரியார் உங்களுக்குத் தேவை. பூஜை அறையில் வைத்து பூஜை செய்யுங்கள். எங்களுக்குத் தேவை இல்லை. முதலில் அடிப்படையிலேயே பெரியார் பிழையானவர். “தமிழ், தமிழர், தமிழர் அரசியல் என்று பேசுவது பித்தலாட்டம். திராவிட எழுச்சியைத் தடுப்பதற்கு செய்வதற்கான அயோக்கியத்தனம். இது ஆரியர்களுக்கு செய்கிற கைக்கூலித்தனம்” என்று பெரியார் பேசியிருக்கிறார்.
“தமிழ் முட்டாள்களின் பாஷை. தமிழ் காட்டுமிராண்டி மொழி. தமிழ் சனியனை விட்டொழியுங்கள். தமிழில் என்ன இருக்கிறது. தமிழ் உங்களைப் படிக்க வைத்ததா?”என்று பெரியார் பேசியிருக்கிறார். என் நிலத்தில் இப்படி பேசுவதற்கு அவர்கள் யார்?
பெரியார் கன்னடர். அவர் கர்நாடகாவில் பிறந்தவர். என் மொழியை தாழ்த்தி இழிவாகப் பேசுவதற்கு பெரியார் யார்? அவருக்கு யார் இந்த உரிமையைக் கொடுத்தது? என் நிலத்தில் வாழும் எல்லோருடைய மொழியும் உயர்ந்தது, என் மொழி தாழ்ந்ததா? அந்த சாஸ்திரத்தில் தமிழன் சூத்திரன் என்று எழுதியிருக்கிறதா? திராவிடக் கூட்டத்துக்குள் எவரும் சூத்திரன் இல்லையா? இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் இல்லையா? அவர்கள் எல்லாம் சூத்திரர்கள் இல்லையா?
அடிப்படையில் என் மொழி முட்டாள்களின் பாஷை என்றால், நீங்கள் முட்டாள்களின் தலைவர் என்றுதானே கூறியிருக்க வேண்டும். தமிழர் தலைவர் என்று புத்தகம் போட்டது யார்? நேற்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், வள்ளலார், வள்ளுவரை எல்லாம் சில கூட்டம் அபகரிக்க நினைக்கிறது. ஒவ்வொரு தமிழனும் அரணாக நின்று காப்பாற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார். முதல்வருடைய அறிக்கையில் திராவிடர்கள் ஒவ்வொருவரும் அரணாக நின்று காக்க வேண்டும் என்று ஏன் கூறவில்லை? இதில், ஏன் திராவிடன் வரவில்லை. காரணம் திராவிடனுக்கும் வள்ளலாருக்கும், திருவள்ளுவருக்கும் சம்பந்தம் இல்லை.
தாய்மொழியை தவறாக பேசியிருப்பது உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தாவிட்டால், என் மொழியும் என் வலியும் உங்களுக்குப் புரியாது. பெண்களின் தாலி அடிமைப்படுத்துவதாக கூறி மேடையில் அறுக்கும் நீங்கள், கருப்பப்பையை ஓரிடத்திலும் அறுக்கவில்லையே? இதுதான் நீங்கள் பெரியாரை பின்பற்றுவதா? பெரியார் பேசியதை பொதுமேடையில் கூறி வாக்கு கேளுங்களேன்.
பெரியார் தான் அண்ணா துரையை படிக்க வைத்தாரா? அன்பழகன், நெடுஞ்செழியன் போன்றவர்களை எல்லாம் படிக்க வைத்தாரா? ரெட்டமலை சீனிவாசனை எல்லாம் அவர்தான் படிக்க வைத்தாரா? பெரியார் உங்களுக்கு வேண்டும் என்றால் வைத்துக்கொள்ளுங்கள். பெரியாரால் தமிழ், தமிழருக்கு நடந்த ஒரு நன்மையைக் கூறுங்கள். தள்ளாடிக் கொண்டிருக்கிறது திராவிடம்.
பேரெழுச்சிப் பெற்றிருக்கிறது தமிழ்த் தேசிய அரசியல். பெரியார், திராவிடம் இல்லாமல் அரசியல் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால், அவை எதுவும் இல்லாமல் தான், தனித்து நின்று மூன்றாவது பெரிய கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கிறேன். 2026க்குப் பிறகு, இந்த திராவிடத்தை துடைத்து தூரவீசப்படும்" என்று சீமான் கூறியுள்ளார்.