‘மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு’ - கரூரில் மக்களுடன் முதல்வர் முகாமில் அமைச்சர் மதிவேந்தன் உறுதி!

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: மக்களுடன் முதல்வர் முகாம் மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காணப்படும் என ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் முகவரித் துறை சார்பாக மக்களுடன் முதல்வர் திட்டம் 3ம் கட்டமாக ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலையில் உள்ள மக்கள் அதிக அளவில் வசிக்கும் 24 மாவட்டங்களில் ஊராட்சிகள் அடங்கிய 184 வட்டங்களில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளன. இம்முகாம்களில் 15 அரசுத் துறைகள் வழங்கும் 44 சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இம் முகாம்களில் பெறப்படும் அனைத்து கோரிக்கைகளையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்களை பரிசீலித்து தகுதியானவர்களுக்கு அரசின் நலத்திட்டங்களை உரிய காலத்தில் வழங்கப்படும்.

கரூர் மாவட்டத்தில் உள்ள நகர்புற பகுதிகளுக்கு முதற்கட்டமாக கடந்த 2023ம் ஆண்டு டிச.18 முதல் கடந்தாண்டு ஜன.6ம் தேதி வரை 50 முகாம்கள் மூலம் 20,746 மனுக்கள், 2ம் கட்டமாக ஊரகப் பகுதிகளில் கடந்த ஜூலை 11ம் தேதி முதல் ஆக.8ம் தேதி வரை 46 முகாம்கள் மூலம் 32,102 மனுக்களும் என மொத்தம் 96 முகாம்கள் மூலம் 52,848 மனுக்கள் பெறப்பட்டு அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. மக்களுடன் முதல்வர் திட்டம் 3ம் கட்டமாக கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் ஜனவரி 21ம் தேதி (நேற்று) தொடங்கி வரும் பிப்.4ம் தேதி வரை நடைபெற உள்ளது.

கரூர் மாவட்டத்தில் கரூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் 3ம் கட்டமாக பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சி கரூர் மாவட்டம் நெரூர் வடபாகத்தில் நேற்று தொடங்கியது. 2ம் நாளாக இன்று (ஜன.22ம் தேதி) கரூர் மாவட்டம் வாங்கல் குப்புச்சிபாளையம் பழையூரில் தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. ஆட்சியர் தங்கவேல் தலைமை வகித்தார்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசியது: திராவிட மாடல் ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றனர். வட்டாட்சியர், ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்து 6 மாதங்கள், ஒராண்டு வரை காத்திருக்கும் நிலை இருந்தது. இதனை போக்கும் மக்கள் வசிக்கும் இடங்களில் அத்தியாவசதியமான மின், உள்ளாட்சி, ஆதி திராவிடர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட துறைகள் பங்கேற்புடன் மக்களிடம் மனுக்கள் பெற்று அவற்றில் 30 நாட்களில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திமுக-வின் தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பட்டியலின, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அனைத்து திட்டங்களையும் கொண்டு சேர்க்கும் நோக்கோடு அரசு செயல்பட்டு வருகிறது” என்று அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் மா.மதிவேந்தன், செந்தில் பாலாஜி ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர். கரூர் எம்பி ஜோதிமணி, எம்எல்ஏக்கள் மாணிக்கம் (குளித்தலை) இளங்கோ (அரவக்குறிச்சி) சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீலோ, வேளாண் இணை இயக்குநர் சிவானந்தம், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கரூர் கோட்டாட்சியர் முகமது பைசல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சியில் அரசு காலனி, சோமூர், காதப்பாறை ஊராட்சியில் காமராஜ் நகர், மண்மங்கலம் ஊராட்சி அண்ணா நகர் ஆகிய இடங்களில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாம்களில் பங்கேற்று அமைச்சர்கள் மனுக்களை பெற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE