பிப்.13, 14-ம் தேதி போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்த பேச்சு

By KU BUREAU

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை வரும் 13, 14 தேதிகளில் நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 1.11 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஆக.27-ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை டிச.27, 28 தேதிகளில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைந்த காரணத்தால் பேச்சுவார்த்தை தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. குறிப்பாக நேற்று மாநிலம் தழுவிய அளவில் ஏஐடியுசியும், இன்று மாநிலம் தழுவிய அளவில் சிறை நிரப்பும் போராட்டத்தை சிஐடியுவும் நடத்தும் நிலையில் பேச்சுவார்த்தை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பிப்.13, 14 தேதிகளில் 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE