தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்கம் சார்பில் 6 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
இதுதொடர்பாக மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையர் டி.ஆபிரகாம் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பாலிடெக்னிக் கல்லூரிகளின் விரிவுரையாளர்களுக்கு குறிப்பிட்ட தொழில்நுட்ப பாடங்Kளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதில், டிஜிட்டல் கட்டுமானம், கான்கிரிட் கட்டுமான பணி, மொபைல் செயலி மேம்பாடு, கம்ப்யூட்டர் நெட்வொர்க், பிசிபி டிசைன் மின்சார உற்பத்தி, வாகன தொழில்நுட்பம், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிசைன் (கேட்), பைப்பிங் டிசைன் ஆகிய பயிற்சிகள் இடம்பெறுகின்றன. இப்பயிற்சி ஜனவரி 22-ம் தேதி (இன்று) தொடங்கி 28-ம் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறும். இப்பயிற்சியில் ஆர்வத்துடன் பங்கேற்க விரிவுரையாளர்களை ஊக்குவிக்குமாறு கல்லூரிகளின் முதல்வர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.