புதுச்சேரி: புதுச்சேரியில் தொழில்நுட்ப பல்கலைக் கழக மாணவி பாதிப்பு சம்பவத்துக்காக அண்ணாமலை, புதுச்சேரி பாஜக தலைவர், அமைச்சர் சவுக்கால் அடித்துகொள்வார்களா என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு மகிளா காங்கிரஸ் இன்று நடத்திய போராட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், "புதுவை மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. வெளி மாநில சுற்றுலாப் பயணிகள், புதுவையை சேர்ந்த ரவுடிகள் ரெஸ்டோ பார்களில் குடித்துவிட்டு கும்மாளமிடுகின்றனர். காவல்துறையும் இதை கண்டுகொள்வதில்லை. பல்கலைக் கழகத்தில் வெளி நபர்கள் எப்படி உள்ளே வந்து மாணவியிடம் அத்துமீறல் செய்தனர்.
பல்கலைக் கழக நிர்வாகம் மீதும் வழக்குப் பதிய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவி புகார் கொடுக்க வேண்டாம் என மிரட்டப்பட்டுள்ளார். இதில் அரசியல் தலையீடும் உள்ளது. பெண்களை அவதுாறாக பேசினாலே பாலியல் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிய வேண்டும். ஆனால் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை பாஜக, என்ஆர்.காங்கிரஸ் அரசு மூடி மறைக்கிறது. தமிழகத்தில் மாணவி பாதிக்கப்பட்டு நடவடிக்கை எடுத்தபோது, சவுக்கால் அடித்துக்கொண்டார்.
புதுவை சம்பவத்தை கண்டித்து அண்ணாமலை சவுக்கால் அடித்துக் கொள்வாரா? மாநில தலைவர் செல்வ கணபதி, அமைச்சர் நமச்சிவாயம் சவுக்கால் அடித்து கொள்வார்களா? தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி ? புதுவைக்கு ஒரு நீதியா ? பாஜகவுக்கு பெண்கள் வன்கொடுமை பற்றி பேச எந்த உரிமையும் கிடையாது. புதுவை முதல்வர் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார். இந்த ஆட்சியில் எல்லா துறையிலும் ஊழல் மலிந்துள்ளது. காவல்துறை அலுவலகம் கட்ட பஞ்சாயத்து அலுவலகமாக மாறிவிட்டது" என்று நாராயணசாமி கூறியுள்ளார்.
» “நானும் டெல்டாகாரன்” என சொல்லும் முதல்வர் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தரவேண்டும்: பிரேமலதா கோபம்