விருதுநகர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 190 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் தேசிய ஊனமுற்றோர் உரிமைகளுக்கான மேடை சார்பில் விருதுநகரில் இன்று சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஆரோக்கியராஜ் வரவேற்றார். மாவட்டத் தலைவர் நடராஜன், மாவட்டப் பொருளாளர் அன்புச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தின் போது, உதவித் தொகைக்காக விண்ணப்பித்து ஒன்றரை ஆண்டுகளாக காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக உதவித் தொகை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தொடர்ச்சியாக 100 நாள் வேலை வழங்க வேண்டும். இத்திட்டத்தில் இலகுவான வேலை மற்றும் 4 மணி நேர வேலையுடன் முழு ஊதியம் ரூ.319 வழங்க வேண்டும்.
வேலை நாள்களுக்கு நிலுவையின்றி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 100 பெண்கள் உள்பட 109 மாற்றுத்தினாளிகளை சூலக்கரை போலீஸார் கைது செய்தனர்.
» “நானும் டெல்டாகாரன்” என சொல்லும் முதல்வர் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தரவேண்டும்: பிரேமலதா கோபம்