இந்திய சிறைகளில் உள்ள வெளிநாட்டு கைதிகளின் நலனுக்கான விதிகள் என்ன? - ஐகோர்ட் கேள்வி

By KU BUREAU

இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கைதிகளின் நலனுக்கான விதிகள் தொடர்பாக மத்திய உள்துறை செயலர் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நைஜீரியாவை சேர்ந்த எக்விம் கிங்ஸ்லி என்பவர் புழல் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:

புழல் சிறையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. எனவே, வெளிநாட்டு கைதிகளுக்கும் உரிய அடிப்படை வசதிகளை செய்து தருமாறு தமிழக அரசுக்கும், சிறைத் துறை நிர்வாகத்துக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.நதியா, ‘‘தமிழக சிறைகளில் உள்ள இந்திய கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் பேச அனுமதி அளிக்கப்படும் நிலையில், வெளிநாட்டு கைதிகள் அவர்களது குடும்பத்தினருடன் பேச கடந்த டிசம்பர் மாதம் முதல் அனுமதி மறுக்கப்படுகிறது. மனுதாரர் உள்ளிட்ட 75 வெளிநாட்டு கைதிகள் சிறைகளில் அடித்து துன்புறுத்தப்படுகின்றனர். முறையான மருத்துவ சிகிச்சையும் அளிக்காமல் தனிமை சிறையில் அவர்களை அடைத்துள்ளனர்’’ என்று வாதிட்டார்.

சிறைத் துறை நிர்வாகம் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், ‘‘சிறையில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் எந்த பாகுபாடுமின்றி உரிய மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் கூறியதாவது: இந்திய கைதிகளுக்கு இருப்பதுபோல, சிறைகளில் உள்ள வெளிநாட்டு கைதிகளின் நலன் தொடர்பாக எந்த விதிகளும் இல்லை. இதனால், அவர்களுக்கான திட்டங்களை முறையாக செயல்படுத்த முடிவது இல்லை. இதுதொடர்பாக தகுந்த விதிகளை வகுக்க வேண்டும். எனவே, இந்த வழக்கில் மத்திய உள்துறை செயலரையும் எதிர்மனுதாரராக சேர்க்கிறோம்.

வெளிநாட்டு கைதிகளின் நலனுக்கான விதிமுறைகள் எதுவும் நாட்டின் மற்ற மாநிலங்களில் உள்ளதா என்பதையும், அதுகுறித்த விவரங்களையும் மத்திய உள்துறை செயலர் அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE