திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.7 குறைந்தது: பின்னலாடை தொழில்துறையினர் மகிழ்ச்சி

By KU BUREAU

திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.7 குறைந்ததால் தொழில்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்படுகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது.

தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்ப நூலை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பது வழக்கம். நூல் விலை மற்றும் மூலப்பொருட்களின் விலையை கருத்தில்கொண்டு, ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, ஜனவரி மாதம் பிற்பகுதி 15 நாட்களுக்கான நூல் விலையை நூற்பாலைகள் நேற்று அறிவித்தன. இதில், நூல் விலை கிலோவுக்கு ரூ.7 குறைந்துள்ளது.

விலை நிலவரம் (கிலோவுக்கு): 10-ம் நம்பர் கோம்டு நூல் ரூ.175, 16-ம் நம்பர் ரூ.185, 20-ம் நம்பர் கோம்டு நூல் ரூ.243, 24-ம் நம்பர் ரூ.255, 30-ம் நம்பர் ரூ.265, 34-ம் நம்பர் ரூ.283, 40-ம் நம்பர் ரூ.303, 20-ம் நம்பர் செமி கோம்டு ரூ.240, 24-ம் நம்பர் ரூ. 250, 30-ம் நம்பர் ரூ.260, 34-ம் நம்பர் ரூ.273, 40-ம் நம்பர் ரூ.293-க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருப்பூர் தொழில்துறையினர் கூறும்போது, “தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகளவு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால், திருப்பூரில் ஆடை தயாரிப்பு மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளது. பின்னலாடை துறையில் வேலை அதிகரித்துள்ள நிலையில், நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.7 குறைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE