திருப்பரங்குன்றம் மலை கோயிலுக்கு பன்றிக் குட்டிகள் காணிக்கை வழங்க அனுமதி கோரி மனு

By என்.சன்னாசி

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள காசி விசுவநாதர் கோயிலிலுக்கு பன்றிக் குட்டிகளை காணிக்கை செலுத்த அனுமதி கோரி ஆட்சியர் சங்கீதாவிடம் மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 'அறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில். இங்குள்ள மலையில் நெல்லித் தோப்பு செல்லும் வழியில் காசிவிசுவநாதர் கோயில் உள்ளது. இங்கு சைவ சித்தாந்த கொள்கை, கோட்பாடுகளை கடை பிடிக்காமல் தான்தோன்றி தனமாக வாழ்ந்து விலங்குகளை கொன்று சித்திரவதை செய்து ரசித்து, தவக் கோலத்தில் இருந்த குருபகவானின் கோபம், சாபத்திற்கும் ஆளாகி வாழ்ந்த பன்னிரு வேளாளர்களும் அவர்களது மறு பிறவியில் பன்னிரு பன்றிக் குட்டிகளாக பிறந்தனர்.

அந்த பன்றிக் குட்டிகளும் பெற்றோர்களை இழந்து மலை பகுதியில் பசியால் வாடி துன்புற்றதாக புராணங்கள் கூறுகின்றன. பன்றிக் குட்டிகளாக பிறந்த பன்னிரு வேளாளர்களுக்கு சாப விமோட்சனம் அளிக்க, பரமசிவனே தாய் பன்றியாக அவதாரம் எடுத்து நேரடியாக வந்து பன்னிரெண்டு குட்டிகளுக்கும் பாலூட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையில் காசிவிசுவநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் பரமபிரானின் அவதாரமான பன்றிக்குட்டிகளை காணிக்கையாகவும், நேர்த்திக்கடனாக செலுத்தவும் இந்து சமய அறநிலைய துறையினர், காவல் துறையினரும் அனுமதி மறுக்கின்றனர். தை மாதம் வரும் முதல் அமாவாசை நாளில் பரமசிவன் பன்றி குட்டிகளுக்கு பால் ஊட்டிய லீலை மற்றும் பக்தர்கள் பன்றி குட்டிகளை காணிக்கை செலுத்த அனுமதிக்கவேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே மலையிலுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட முயன்று, போராட்டத்தில் ஈடுபட்டதாக ஐக்கிய ஜமாத், எஸ்டிபிஐ கட்சியினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில் மலைமேலுள்ள கோயிலில் பன்றி குட்டிகளை காணிக்கையாக வழங்க வழக்கறிஞர் அனுமதி கோரி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE