தனியார் பேருந்துகளின் கட்டண கொள்ளையை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மக்களிடம் தனியார் ஆம்னி பேருந்துகள் வரலாறு காணாத கட்டண கொள்ளையை நடத்தி வருகின்றன. மதுரையில் இருந்து சென்னைக்கு அதிகபட்சமாக ரூ.3,950 நிர்ணயிக்கப்படுள்ளது. நெல்லை - சென்னை ரூ.4,500, கோவை - சென்னை ரூ.5,000, நாகர்கோவில் - சென்னை ரூ.3,899, திருச்சி - சென்னை ரூ.4,000 என கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஆம்னி பேருந்து முன்பதிவுக்கான இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இயல்பாக அரசுப் பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட 6 முதல் 8 மடங்கு வரையிலும், தனியார் பேருந்துகளின் கட்டணத்தை விட 4 முதல் 6 மடங்கு வரையிலும் அதிகமாகும். தனியார் பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்டண கொள்ளை தொடர்பாக சராசரியாக ஒரு பேருந்துக்கு ரூ.1,750 மட்டும்தான் அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கும். ஒரு பயணியிடம் ரூ.5,000 என்ற அளவுக்கு கட்டண கொள்ளை நடத்தும் பேருந்துகளிடம் ரூ.1,750 மட்டும் அபராதம் வசூலிக்கப்பட்டால் கட்டண கொள்ளையை எவ்வாறு தடுக்க முடியும். தனியார் பேருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், திமுக அரசு துணை போவது ஏன்.
மக்களின் நலன்களை காக்க வேண்டும் என்பதை உணர்ந்து தனியார் பேருந்துகள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தும் வகையில் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை தமிழக அரசே நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
» எல்லை பாதுகாப்பு படை கூடுதல் டிஜிபி ஆனார் மகேஷ் குமார் அகர்வால்
» கோவையில் புலி நகம் பதித்த தங்க சங்கிலி அணிந்திருந்த நபர் கைது: வனத்துறையினர் நடவடிக்கை