கரூர்: ஆன்லைன் வர்த்தகத்தில் வெளிநாட்டினரை அனுமதிக்கக்கூடாது என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்.
கரூர் மாவட்ட நெல் மற்றும் அரிசி மொத்த வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் இன்று (ஜன. 19ம் தேதி) கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில துணை தலைவர் வி.ஆர்.கந்தசாமி தலைமை வகித்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கொடியேற்றி வைத்து செய்தியாளர்களிடம் கூறியது: ''தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு 42வது மாநில மாநாடு மே 5ம்தேதி மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 5 லட்சம் வணிகர்கள் கலந்து கொள்கின்றனர். கரூர் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி கரூர் மாவட்டத்தில் இருந்து 5,000 பேர் கலந்துகொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தால் லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் காணாமல் போயுள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் இது 10 லட்சமாக அதிகரிக்கவும் வாய்ப்ப்புள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் வெளிநாட்டினரை அனுமதிக்கக் கூடாது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளமைப்புகள் பலவற்றில் பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றில் ஏற்கனவே இருந்த வணிகர்களுக்கே நியாயமான வாடகையில் வழங்கவேண்டும்.
» கன்னியாகுமரியில் மேகமூட்டத்தால் தென்படாத சூரிய உதயம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
» ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நாங்கள் புறக்கணிக்கவில்லை; ஆதரவு யாருக்கு? - ஓபிஎஸ் அதிரடி
மக்கள் இலவசங்களை மறுத்துவிட்டு வேலை, மின்சாரம், சாலை, குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளை கேட்டு பெறவேண்டும். சிலிண்டர் ரூ.500, மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 என பல்வேறு இலவசங்களை தேர்தலில் பல்வேறு கட்சிகள் அறிவித்து வருகின்றன. இலவச அறிவிப்புகளை விட்டுவிட்டு சேவையில் கட்சிகள் ஈடுபடவேண்டும்.
காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றவேண்டும். ஆண்டுதோறும் கட்டணங்களை உயர்த்தி வருகின்றனர். இதே நிலை நீடித்தால் வணிக பேரமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும். ரூ.1.5 கோடி வர்த்தகம் செய்யும் இணக்க வரி செலுத்தும் வியாபாரிகளுக்கு கட்டிட வாடகையில் 18 சதவீத ஜிஎஸ்டியில் இருந்து தளர்வு வழங்க வேண்டும். மக்களிடம் கடன் அட்டைகளை வழங்கி கரன்சி பயன்பாட்டை குறைத்து வருகின்றனர். கரன்சி ஒழிப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும்.
அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் அதிக வரி விதிப்பாக 28 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. பாப்கார்னுக்கு ஒரு வரி, இனிப்பு, உப்பு சேர்த்தால் ஒரு வரி என குழப்பமான நிலை உள்ளது. பல்வேறு வரி விதிப்புகளை குறைத்து ஒரு முனை வரி விதிப்பை அமல் படுத்தவேண்டும். ரூ.1 லட்சம் கோடி வருவாயை தாண்டினாலே வருமான வரி கூட இருக்காது என எதிர்பார்த்தோம். ரூ2 லட்சம் கோடியை கடந்தும் பல்வேறு வரி விதிப்பு தொடர்கிறது.
வணிக நிறுவன உரிமை பெற போனால் அனைத்து கட்டணங்களும் கூடுதலாக உள்ளது. வழக்கமான கட்டணத்தில் ஒற்றை சாளர முறையில் உரிமம் வழங்கவேண்டும். அதிகாரிகளால் வணிகர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதால் இதனால் வணிகர் பேரமைப்பு மாநாட்டிற்கு வணிகர் பிரகடன மாநாடு என பெயரிட்டுள்ளோம்'' என்றார்.
கரூர் மாவட்ட வர்த்தக மற்றும் தொழில் கழக தலைவர் ராஜு, செயலாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.