நாகர்கோவில்: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
தொடர் விடுமுறையின் இறுதி நாளான இன்று கன்னியாகுமரியில் அதிகாலையிலே பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர். குறிப்பாக அதிகாலையில் சூரிய உதயம் பார்ப்பதற்காக முக்கடல் சங்கம கடற்கரை, பகவதியம்மன் கோயில் கிழக்கு வாசல் பகுதி, வாவத்துறை படகு தளம் அருகே உள்ள பகுதி, காட்சி கோபுரம், வெங்கடாசலபதி கோயில் வளாகம் போன்றவற்றில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நின்றிருந்தனர்.
வழக்கமாக காலை 6.45 மணியளவில் தென்படும் சூரிய உதயம் மேகமூட்டத்தால் 7.30 மணி ஆன பின்னரும் தெரியவில்லை. பின்னர் உதய தோற்றத்தைத் தாண்டி வெளிறிய நிலையில் தாமதமாகவே சூரியன் தெரிந்தது. இதனால் வெகுநேரமாக காத்து நின்ற சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் விவேகானந்தர் பாறைக்கு படகு சவாரி செய்து கண்ணாடி இழை பாலத்தை பார்வையிட்டனர். பொதுவாக இன்று குமரி மாவட்டம் முழுவதும் பகலிலும் வெயில் இன்றி மேகமூட்டத்துடன் கூடிய தட்பவெப்பம் நிலவியது.
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரி மட்டுமின்றி திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், உதயகிரிகோட்டை உட்பட பிற சுற்றுலா மையங்களிலும் கூட்டம் அலைமோதியது.
» ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நாங்கள் புறக்கணிக்கவில்லை; ஆதரவு யாருக்கு? - ஓபிஎஸ் அதிரடி
» பருவம் தவறிய மழை; நெற்பயிர்கள் பாதிப்புக்கு உடனே நிவாரணம் வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்