ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நாங்கள் புறக்கணிக்கவில்லை; ஆதரவு யாருக்கு? - ஓபிஎஸ் அதிரடி

By KU BUREAU

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கவில்லை என்றும், யாருக்கு ஆதரவளிப்போம் என்பது ரகசியம் என்றும் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நாங்கள் புறக்கணிக்கவில்லை. யாருக்கும் ஆதரவில்லை. ஆனால் வாக்களிப்போம், யாருக்கு என்பது ரகசியம். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பின் எங்கள் ஆதரவு யாருக்கு என்பது தெரியும்" என்று கூறினார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ம் தேதி தொடங்கி கடந்த 17-ம் தேதி வரை நடைபெற்றது. திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் நிறைவு நாளான 17-ம் தேதி மனுதாக்கல் செய்தனர்.

மொத்தமாக 58 வேட்பாளர்கள் 65 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில், திமுக வேட்பாளர் சந்திரகுமார் 4 மனுக்கள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 3 மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. இதில், திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 55 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக மணீஷ் தெரிவித்தார்.

மனுக்களை திரும்ப பெற நாளை (ஜன.20) கடைசி நாள். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். சின்னமும் ஒதுக்கப்படும்.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE