பருவம் தவறிய மழை; நெற்பயிர்கள் பாதிப்புக்கு உடனே நிவாரணம் வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

By KU BUREAU

சென்னை: பருவம் தவறிய மழையால் பாதிக்கப்படும் நெற்பயிர்களுக்கு அரசு நிவாரணம் அளிக்கவேண்டும். மேலும், விவசாயிகள் அதிக ஈரப்பதத்துடன் கொண்டுவரும் நெல்மணிகளை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் என திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2025-ஆம் ஆண்டு துவக்கத்திலிருந்தே தமிழகம் முழுவதும் கடும் பனி பெய்து வருகிறது. இதனால், டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்களில் உள்ள நெல் மணிகள் ஈரப்பதம் அதிகரித்து கனம் தாங்காமல் சாய்ந்து விட்டன. இந்நிலையில், நேற்று முதல் 3-4 நாட்கள் வரை மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதைத் தொடர்ந்து, நேற்று இரவு முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மழைப் பொழிவின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.

ஏற்கெனவே, பனிப்பொழிவின் காரணமாக நெல்மணிகள் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் பெய்து வரும் மழையினாலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறது. மேலும், அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல் மூட்டைகள் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படாததால், வெட்ட வெளியில் இருக்கும் நெல் மூட்டைகள் பனிப்பொழிவு மற்றும் மழையினால் நனைந்து அதிக ஈரப்பதம் உள்ளதாக இருக்கின்றன.

எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் விவசாயிகள் கொண்டு வரும் அனைத்து நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய வலியுறுத்துகிறேன். சம்பா பயிரிட்ட விவசாயிகள் பனிப்பொழிவு மற்றும் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் சூழ்நிலையில் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு விவசாயிகளின் சிரமங்களைப் போக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

உடனடியாக வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகளை நேரடியாக அனுப்பி, பாதிக்கப்பட்ட வேளாண் நிலங்களை கணக்கீடு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்கவும், பயிர்க் காப்பீடு மூலம் உரிய இழப்பீடு வாங்கித்தரவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உடனடியாக டெல்டா மாவட்டங்கள் முழுவதும் நெல்மணிகளை காய வைக்கும் ‘டிரையர்’ வண்டிகளை அனுப்பி நெல்மணிகளின் ஈரப்பதத்தை குறைக்க வழிவகை செய்ய வேண்டும்.

தற்போது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யும் நிலையில், பனி மற்றும் மழையினால் ஈரப்பதம் அதிகமாகியுள்ளதை கணக்கில் கொண்டு 22 சதவீதம் வரை ஈரப்பதம் கொண்ட நெல்லையும் கொள்முதல் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, உடனடியாக பனிப்பொழிவு மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா எனவே, உடனடியாக பனிப்பொழிவு மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்குத் மாவட்ட விவசாயிகளுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க திமுக அரசை வலியுறுத்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE