சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிராக ஏகனாபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி மைதானத்தில் வேனில் நின்றபடி காலை 11 மணி முதல் தவெக தலைவர் விஜய் பொதுமக்களிடம் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையின் 2-வது விமான நிலையம் பரந்தூர் பகுதியில் அமைய உள்ளது. இதனை எதிர்த்து 908 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களை நாளை (ஜனவரி 20-ம் தேதி) சந்திக்க தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே, தவெக தலைவர் விஜய் பரந்தூர் தனியார் திருமண மண்டபத்தில் மக்களை சந்தித்து பேச உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், ஏகனாபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி மைதானத்தில் வேனில் நின்றபடி காலை 11 மணி முதல் விஜய் பொதுமக்களிடம் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையின் 2-வது விமான நிலைய திட்டத்துக்காக காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5133 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக பொதுமக்களின் விளை நிலங்கள், நீர் நிலைகள் என பல இடங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் போராட்டம் 908 நாட்களாக நீடித்து வருகிறது.
» சிட்லபாக்கத்தில் 20 வீடுகளில் ஏசி பெட்டியில் செம்பு கம்பிகள் திருட்டு: மக்கள் அதிர்ச்சி
» களக்காடு-முண்டந்துறையில் மேய்ச்சல் உரிமையை பாதுகாக்க வேண்டும்: முத்தரசன் கோரிக்கை
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிராக போராடும் மக்களையும், போராட்டக் குழுவினரையும் சந்திக்க முடிவு செய்தார். இதற்காக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அக்கட்சி சார்பில் மனு அளித்தனர். கடந்த சில தினங்களாகவே அந்தக் கட்சியின் பொதுச் செயலர் ஆனந்த் உள்ளிட்டோர் விஜய் வருகைக்கான ஏற்பாடுகளை கவனித்து வந்தனர். இந்நிலையில் விஜய் பரந்தூர் பகுதிக்கு வருவதற்கு வரும் 20-ம் தேதி அனுமதி காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் முழுமையாக கையகப்படுத்தப்படும் ஏகனாபுரம் கிராமத்தில் போராட்டக் குழுவினரையும், பொதுமக்களையும் விஜய் சந்திக்கிறார். இதில் 13 கிராமங்களில் இருந்து பாதிக்கப்படும் பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.